புதிய வடிவமெடுக்கப் போகும் இந்தியா: தான் சொல்வதைக் கேட்கின்ற நிலைக்கு இலங்கையை வைத்திருக்கப் போகிறது?

அதாவது தான் சொல்வதைக் கேட்கின்ற நிலைக்கு இலங்கையை வைத்திருக்கப் போகிறது. அது தான் சீன ஆதிக்கத்துக்கு முடிவு கட்டும் என்று இந்திய நம்பத் தொடங்கி விட்டது. சீன ஆதிக்கத்தின் அதிகரிப்பானது இலங்கைக்கு மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விடயமல்ல இந்துசமுத்திரப் பிராந்தியத்தையே பதற்றத்துக்குள்ளாக்கும் என்று இந்தியா வலுவாக நம்புவதன் வெளிப்பாடு தான் இது.

எனவே தான் இந்தியா தனது காலடிக்குள் இருக்கும் இலங்கையுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்தி உடன்பாடுகளைச் செய்து தனது கைக்குள்போட்டு கொள்ள முடிவு செய்துள்ளது. இதற்கான முற்னேற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பமாகி விட்டன. ஆம்பக்கட்ட நடவடிக்கை, கலந்துரையாடல்களுக்காகவே இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் அடுத்தடுத்து கொழும்பு வரப் போகின்றனர். அடுத்த வருடத் தொடக்கத்தில் எப்படியாவது இரு நாடுகளும் இணைந்து பாதுகாப்புக் கலந்துரையாடலை நடத்தப் போவது உறுதியாகியுள்ளது. இது இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் விரிவுபெறுவதைத் தடுப்பதாகவே அமையப் போகிறது. 1990 இற்குப் பிறகு எட்ட நின்று உதவிய இந்தியா இப்போது கிட்ட வந்து அரவணைத்துக் கொள்ளப் போகிறது. இந்தியாவின் இந்த முடிவில் இலங்கை அரசுக்கு விருப்பம் இல்லையென்றே தெரிகிறது. ஆனாலும் அதற்கு வேறுவழியில்லை. இந்தியாவின் முடிவுக்கு கட்டுப்பட்டுப் போக வேண்டிய கட்டாயம் அதற்கு உள்ளது. இந்தியாவின் முடிவை மீறிச் செயற்பட முனைந்தால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதால் இலங்கை அரசு இப்போது இந்தியாவின் பாதுகாப்பு வளையத்துக்குள் அதன் கண்காணிப்பு எல்லைக்குள் நின்றே தான் விளையாட வேண்டியிருக்கும். இது சீனாவுக்கு கடிவாளம் போடுவது மட்டுமன்றி இலங்கையும் அதன் எல்லைக்கு அப்பால் செல்வதற்கு அனுமதிக்காது.

இனி,

புதிய கட்டத்துக்குள் நுழையப் போகும் இலங்கைஇந்திய பாதுகாப்பு உறவுகள்
 
புலிகளுக்கு எதிரான போர் நடைபெற்ற காலங்களில் தீவிரமடையத் தொடங்கிய சீன இலங்கை உறவுகளின் நெருக்கம், போர் முடிவுக்கு வந்த பின்னர் இன்னும் வலுவடைந்துள்ளது. இந்த நெருக்கமானது இந்தியாவை மிகவும் கவலை கொள்ள வைத்துள்ளது. தனது காலடிக்கள் இருக்கும் இலங்கை, தன்னை மீறி எதையும் செய்துவிடாது என்று இந்தியா வலுவாக நம்பி வந்தது. ஆனால் இலங்கையோ, இந்தியாவை நிரந்தர நண்பன் என்று கூறிக் கொண்டே சீனாவை அரவணைத்து உறவு கொண்டாடத் தொடங்கியது. இந்த உறவு நெருக்கத்தின் விளைவு, இந்திய,சீன நாடுகளினது பொருளாதார, இராஜதந்திரப் போட்டிக்களமாக இலங்கையை மாற்றமடையச் செய்துள்ளது.

இப்போது இந்தியாவும் ,சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு இலங்கையில் எதையும் செய்கின்ற போக்கு உச்சமடைந்துள்ளது. சீனா துறைமுகம் ஒன்றில் கால் வைத்தால் இந்தியா பதிலுக்கு இன்னொரு துறைமுகத்தில் கை வைக்கிறது. அதுபோல விமான நிலையம், ரயில் பாதை, வீதிகள், மின் திட்டங்கள், வைத்தியசாலைகள் என்று இரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்து, உதவி வழங்கி வருகின்றன.

இதெல்லாம் இலங்கை மீது கொண்ட இரக்கத்தினாலோ பாசத்தினாலோ அல்ல. அவர்களுக்கிடையிலான போட்டியின் விளைவாக நடந்தேறும் காரியங்கள். தனியே பொருளாதார விடயங்களில் மட்டும் இந்தப்போட்டி நடக்கவில்லை. இராஜதந்திர மட்டத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் இருந்து ஒரு குழுவோ அல்லது இராஜதந்திர பிரமுகர்களோ கொழும்பு வந்தால் சீனாவில் இருந்தும் அது போன்றதொரு குழு கொழும்பு வருகிறது. அவர்களுக்கு இடையில் தான் இந்தப் போட்டி என்றால் இலங்கையும் கூட அதே பொறிக்குள் சிக்கி விட்டது.

இந்தியாவுக்கு ஒரு முக்கிய தலைவர் சென்றால், அடுத்து சீனாவுக்கும் அவரை அல்லது இன்னொருவரை அனுப்பி நிலைமையை சமாளித்துக் கொள்ள முற்படுகிறது.

இராஜதந்திரமட்டத்தில் நெகிழ்வு முறை உறவுப் போக்கை கையாளுவதில் இலங்கை முனைப்பாக இருக்கிறது. இந்தியாவும் சீனாவும் பொருளாதார உதவிகள் விடயத்தில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் எப்படிப் போட்டித் தன்மையுடன் நடந்து கொள்கின்றனவோ அதே வழியில் இலங்கையும் செயற்பட முனைகிறது. இது இருநாடுகளையும் சமாளித்துப்போகின்ற நோக்கத்தைக் கொண்டது. அதனால் தான் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் போன்றோர் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அடுத்தடுத்த பயணத் திட்டங்களை போடுகின்றனர்.

ஒரு நாடு இலங்கையில் செய்ய முனையும் ஒரு முதலீடு அல்லது திட்டத்தைப் போல, மறுநாடும் அதேபோன்றதொரு முதலீடு அல்லது திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போக்கு இலங்கையைப் பொறுத்தவரையில் பெரும் வரப்பிரசாதம் தான். இரு நாடுகளினதும் இந்த ஏட்டிக்குப் போட்டியான செயற்பாடுகளால் இலங்கை நன்றாகவே குளிர்காய்ந்து கொள்கிறது, இந்தக் குளிர்காய்தல் என்பது எதுவரை நீளப் போகிறது என்ற கேள்வி இப்போது எழ ஆரம்பித்து விட்டது.

இந்திய சீன ஆதிக்கப் போட்டி இலங்கையை எங்கு கொண்டு போய் நிறுத்தி விடுமோ என்ற அச்சம் வலுவாக எழுந்துள்ளதன் வெளிப்பாடு அது.

ஆனால் இதுபற்றி இலங்கை அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எனினும் இந்தியாவுக்கு சீனாவின் ஆதிக்கம் பற்றிய கவலைகள் அதிகரித்து விட்டன என்பது உண்மை.

சீன இலங்கை உறவுகளை ஒரு கட்டத்தகு மேல் வளர விடுவது ஆபத்தானது என்று இந்தியா உணர ஆரம்பித்துள்ளது. கடந்த வாரம் இந்திய நாடாளுமன்றத்தில் சீனாவின் தலையீடுகள் பற்றிய ஒரு விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் அதிகமான தலையீடுகள் குறித்து இந்தியா கவலை கொள்வதாகவும் அதுபற்றி தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இலங்கை, பாகிஸ்தான்,மியன்மார் என்று சீனாவின் ஆதிக்கம் வலுப்பெறுவதை இந்தியா விரும்பவில்லை. அதை முறியடிக்க இந்தியா அடுத்த நகர்வுக்குத் தயாராகி விட்டது.

இந்தியாவின் அடுத்து நகர்வு என்ன இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை இன்னமும் நெருக்கமாகப்பேணிக் கொள்வதே அது. இது விரைவில் சாத்தியமாகப் போகின்ற ஒரு விடயம் என்றே கருதப்படுகிறது. பாதுகாப்பு உடன்பாடு ஒன்றின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நெருக்கமடையப் போகிறது. அதற்கான முயற்சிகளில் இந்தியா ஏற்கனவே இறங்கி விட்டது. இதன் ஒரு கட்டமாக இந்தியாவும் இலங்கையும் இணைந்து வருடாந்தம் பாதுகாப்புக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தப் போகின்றன. இதற்கான இணக்கப்பாடு குறித்து கடந்த யூன் மாதம் புதுடெல்லியில் வெளியிடப்பட்ட இந்திய இலங்கை கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அடுத்த வருடத் தொடக்கத்தில் முதலாவது பாதுகாப்புக் கலந்துரையாடல் நடத்தப்படப் போகிறது. இதற்கான முன்னேற்பாடாக இந்தியாவின் பாதுகாப்புத் துறையை சேர்ந்த பல முக்கிய தளபதிகள் இஅதிகாரிகள் இலங்கைக்கு அடுத்தடுத்து வரப் போகின்றனர்.

இன்று இந்திய இராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் விஜய்குமார் சிங் கொழும்பு வரப் போகிறார். அவரை அடுத்து இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரதீப் வசந்த் நாயக் இலங்கைக்கு வரப் போகிறார். அவருக்குப் பிறகு இந்தியாவின் பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் கொழும்பு வரப் போகிறார். இவர்களின்அடுத்தடுத்த வருகைகளின் நோக்கத்தை யாரும் சாதாரணமாக எடை போட்டு விட முடியாது.

இதுவரை காலமும் இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையில் பாதுகாப்புத்துறையில் பேணப்பட்டு வந்து உறவுகள் தொடர்பான கொள்கையில் மாற்றங்கள் வரப் போவதற்கான அறிகுறியே இது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இப்போது இலங்கையுடனான உறவுகளில் புதிய வடிவமெடுக்கப் போகிறது. கிட்டத்தட்ட அது 1987ம் ஆண்டுக்குத் திரும்ப முனைகிறது. அதாவது தான் சொல்வதைக் கேட்கின்ற நிலைக்கு இலங்கையை வைத்திருக்கப் போகிறது. அது தான் சீன ஆதிக்கத்துக்கு முடிவு கட்டும் என்று இந்திய நம்பத் தொடங்கி விட்டது. சீன ஆதிக்கத்தின் அதிகரிப்பானது இலங்கைக்கு மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விடயமல்ல இந்துசமுத்திரப் பிராந்தியத்தையே பதற்றத்துக்குள்ளாக்கும் என்று இந்தியா வலுவாக நம்புவதன் வெளிப்பாடு தான் இது. எனவே தான் இந்தியா தனது காலடிக்குள் இருக்கும் இலங்கையுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்தி உடன்பாடுகளைச் செய்து தனது கைக்குள்போட்டு கொள்ள முடிவு செய்துள்ளது.

இதற்கான முற்னேற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பமாகி விட்டன.

ஆம்பக்கட்ட நடவடிக்கை, கலந்துரையாடல்களுக்காகவே இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் அடுத்தடுத்து கொழும்பு வரப் போகின்றனர். அடுத்த வருடத் தொடக்கத்தில் எப்படியாவது இரு நாடுகளும் இணைந்து பாதுகாப்புக் கலந்துரையாடலை நடத்தப் போவது உறுதியாகியுள்ளது. இது இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் விரிவுபெறுவதைத் தடுப்பதாகவே அமையப் போகிறது. இலங்கைக்கு இராணுவ உதவிகளை தாராளமாக வழங்கவும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்தியா உத்தரவாதம் வழங்கத் தயாராகும் நிலைக்கு வந்துள்ளதாகவே தெரிகிறது. 1990 இற்குப் பிறகு எட்ட நின்று உதவிய இந்தியா இப்போது கிட்ட வந்து அரவணைத்துக் கொள்ளப் போகிறது.

இப்போது இலங்கை அரசை பலப்படுததுவதற்கு ஆயுதங்களை வழங்குவதற்கு இந்தியாவுக்கு எந்தத் தடையும் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு காரியம் சாதிக்க முடிவு செய்து விட்டது அது. இந்தியாவின் இந்த முடிவில் இலங்கை அரசுக்கு விருப்பம் இல்லையென்றே தெரிகிறது. ஆனாலும் அதற்கு வேறுவழியில்லை. இந்தியாவின் முடிவுக்கு கட்டுப்பட்டுப் போக வேண்டிய கட்டாயம் அதற்கு உள்ளது.

இந்தியாவின் முடிவை மீறிச் செயற்பட முனைந்தால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதால் இலங்கை அரசு இப்போது இந்தியாவின் பாதுகாப்பு வளையத்துக்குள் அதன் கண்காணிப்பு எல்லைக்குள் நின்றே தான் விளையாட வேண்டியிருக்கும். இது சீனாவுக்கு கடிவாளம் போடுவது மட்டுமன்றி இலங்கையும் அதன் எல்லைக்கு அப்பால் செல்வதற்கு அனுமதிக்காது.

– சுபத்ரா

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.