எனக்கும் வெள்ளை வேன் அனுப்பப்படலாம்: சந்திரிகா அச்சம்

இலங்கை அதிபர் ராஜபக்சவின் ஆட்சி குறித்து தாம் கருத்து தெரிவித்தால் தமக்கும் வெள்ளை வேன் அனுப்பப்படலாம் என முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க அச்சம் தெரிவித்துள்ளார்.

18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி மற்றும் முழுமையாக ஜனநாயக மீறல் ஆகும் என தெரிவித்துள்ள அவர், 2000 ஆம் ஆண்டு தாம் முன்வைத்த அரசியல் தீர்வில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றும் யோசனையும் அடங்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என தெரிவித்த போதும் தற்போதைய வெளிநாட்டமைச்சர் ஜிஎல் பீரிஸ் இரண்டு வருடங்கள் வரை அதனை நீடிக்கலாம் எனக்கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதியின் பதவியினை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவீர்களா? என அவரிடம் கேட்கப்பட்டபோது, தாம் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டவள் அல்ல என பதிலளித்துள்ளார் சந்திரிகா.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டு வருட ஆட்சி தொடர்பாக சந்திரிகாவிடம் கேட்டபோது, அது தொடர்பாக தாம் பதிலளிக்க விரும்பவில்லை என்றும், பதிலளித்தால் தமக்கு வெள்ளை வேன் அனுப்பப்பட்டு விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.