அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை மீளப்பெற வேண்டும்! ‐ கொழும்பு பேராயர்

சிறிலங்கா அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவுள்ள அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தினால் ஜனநாயக ஆட்சிக்கு ஏற்படும் பின்விளைவுகள் குறித்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக கொழும்பு பேராயர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி விவாதத்திற்கு உட்படவுள்ள அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தினை சிறிலங்கா அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
நாடாளுமன்றத்தில் அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஒருவர் இரு தடவைகள் மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என்ற கட்டுப்பாடு இல்லாது போய்விடுவதோடு, தேர்தல் ஆணைக் குழு, பொது காவல்துறை ஆணைக்குழு மற்றும் இலஞ்ச ஆணைக்குழு போன்றவற்றிற்கு அரசாங்கமும், ஜனாதிபதியும் தாங்களே ஆட்களை தெரிவு செய்து நியமிக்கும் அதிகாரத்தைப் பெறுவர்.
 
இது எமது தேசிய நிறுவனங்களை அரசியல் மயப்படுத்தி இப்போது உடைந்த நிலையிலுள்ள அரசியல் ஜனநாயக கலாசாரத்தை மிக விரைவாக அழிவின் விளிம்பிற்குள் அழைத்துச் செல்லும்.
எனவே, அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றம் நிராகரிக்க வேண்டியது அவசியமானது. இந் நாட்டிலுள்ள ஜனநாயக சுதந்திரத்தை மதிக்கும் எவரும் இந்த அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு தமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என கொழும்புப் பேராயர் கூறியுள்ளார் அதேவேளை, இந்த அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம் கண்டிக்கப்பட வேண்டியதென சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
 
ஜனநயாகத்தை விரும்பும் எவரும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் உத்தேச அரசியல் சாசனத் திருத்தங்களை எவ் வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று, இந்த அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம் சர்வாதிகார ஆட்சி முறைக்கு வழியமைக்கும் என ஐக்கிய சோஷலிசக் கட்சியும், இந்த அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம் மோசமான இருள் சூழ்ந்த எதிர்காலத்தை உருவாக்கப் போகிறது என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
இந் நிலையில், அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது பாரிய வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக சிறிலங்காப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இதனையடுத்து கொழும்பின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு சிறிலங்காப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.