கிழக்கில் காணாமல் போன இளைஞர்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

இலங்கையில் இடம்பெற்ற போர்ச் சூழலின் போது பாதுகாப்புக் கருதி மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் தங்களது குடும்பத்தினருடன் தங்கியிருந்த போது காணாமல் போன இளைஞர்களின் 20வது ஆண்டு நினைவு தினம் அவர்களது உறவினர்களால் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த இளைஞர்கள் சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டிருந்த போதிலும், இவர்கள் இன்று வரை விடுதலை செய்யப்படவில்லை. அத்துடன், இவர்கள் குறித்த தகவல்களும் சிறிலங்கா படைத்தரப்பினரால் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந் நிலையில், இச் சம்பவத்தின் நினைவாக காணாமல் போன இளைஞர்களின் உறவினர்களால் 20வது ஆண்டு நிறைவு இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி 158 பேரும், 23ஆம் திகதி 16 பேரும் சிறிலங்காப் படையினரால் விசாரணைக்கு என பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இவர்கள் சிறிலங்காப் படையினரால் கொல்லப்பட்டதாக கருதப்படுகின்ற போதிலும், தமது பிள்ளைகள் இன்றும் உயிருடன் இருப்பதாக இவ்விளைஞர்களின் பெற்றோர்கள் சிலர் நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது கிழக்கு மாகாணத்தில் நிலவிய சூழ்நிலை காரணமாக செங்கலடியைச் சேர்ந்து 40,000க்கும் மேற்பட்டோர் தமது இருப்பிடங்களைவ pட்டு வெளியேறி வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த போதே இச் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இச் சம்பவத்தின் போது காணாமல் போன 174 இளைஞர்களின் நினைவாக அப் பிரதேச மதவழிபாட்டுத் தலங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.