நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது: சந்திரிக்கா

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

18 ஆவது அரசியல் திருத்தம் குறித்து கருத்து வெளியிடுகையில் சந்திரிக்கா இதனைத் தெரிவித்துள்ளார்.

18 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் கண்டிக்கப்பட வேண்டியது. ஜனநயாகத்தை விரும்பும் நபர் என்ற வகையில் அரசாங்கத்தின் உத்தேச அரசியல் அமைப்புத் திருத்தங்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதென முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்சியாளர்கள் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கக் கூடாது எனவும், அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2000ஆம் ஆண்டு தமது ஆட்சிக் காலத்தில் முன்வைக்கப்பட்ட அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் மூலம் நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாதொழிக்க முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு தாம் எப்போதும் ஆதரவளிக்கவில்லை எனவும், தற்போதைய வெளிவிவகார அமைச்ர் ஜீ.எல்.பீரிஸ் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஓராண்டு காலத்திற்கு நீடிக்குமாறு கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பேராசை தமக்குக் கிடையாது எனவும், இதனால் மீண்டுமொருமுறை தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கைகளினால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.