எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் நடத்தாமல் சென்னையில் நடத்தலாம் – சிவத்தம்பி

இலங்கையில் நடக்கவிருக்கும் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழறிஞர் கா சிவத்தம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் வருகிற டிசம்பர் மாதம் கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இலங்கை தமிழர் முருகபூபதி என்பவர் இந்த எழுத்தாளர் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவதம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இந்த மாநாட்டுக்கு சிவத்தம்பி ஆதரவாக இருந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது இந்த மாநாட்டுக்கு சிவத்தம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முருகபூபதிக்கு சிவதம்பி விடுத்துள்ள வேண்டுகோளில், “உலக தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் வைத்து நடத்த இது உகந்த நேரம் அல்ல என்று கூறியுள்ளார். இந்த மாநாட்டுக்கு இலங்கை அரசு அரசியல் சாயம் பூச முயற்சிக்கிறது. அது மாநாட்டை பிரச்சினைக்குரியதாக்கிவிடும் என்று சிவத்தம்பி கூறியுள்ளார்.

தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் நடத்து வதை விட சென்னையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும். எல்லோரும் ஒன்று கூட வசதியாக இருக்கும். பிரச்சினைகளை சுதந்திரமாக விவாதிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களும், கலைஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இது போர் குற்றங்களை மூடி மறைக்க நடக்கும் முயற்சியாக அமைந்து விடும் என்று கூறியிருந்தனர். எனவே மாநாட்டை அங்கு நடத்தக் கூடாது என்றும் மீறி நடத்தினால் நாங்கள் மாநாட்டை புறக்கணிப்போம் என்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தெரிவித்திருந்தனர்.

ஏற்கனவே தமிழ் நாட்டு கலைஞர்கள் இலங்கையில் அரசு ஆதரவுடன் நடைபெறும் எந்த நிகழ்ச்சியையும் புறக்கணிப்போம் என்று அறிவித்து இருந்தனர். தனிப்பட்ட முறையில் நடத்தும் மாநாட்டுக்கு அழைப்பு அனுப்பினால் இலங்கை சென்று கலந்து கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ் இசைக் கலைஞர் சீர்காழி சிவ சிதம்பரம் ஏற்கெனவே வீரகேசரி பத்திரிகையின் நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.