தமிழினம் புதைக்கப்படுவதை சர்வதேச சமூகம் கண்டுகொள்ளுமா? அல்லது காணாதது போல விட்டு விடுமா?

போரினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு இறுதிக்கட்டத்தை அடைந்து கொண்டிருப்பதாக அரசாங்கம் சொல்லிக் கொண்டிருக்கிறது. இடம்பெயர்ந்த மக்களை குறுகிய காலத்துக்குள் மீளக்குடியமர்த்தி சாதனை செய்து விட்டதாக சர்வதேசத்திடம் நற்பெயர் பெறுவது ஒன்று தான் இப்போது இலங்கை அரசாங்கத்தின் குறிக்கோளாக இருக்கிறது.

சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் இப்போது ஒரு உத்தியைக் கையாள ஆரம்பித்துள்ளது. மீளக்குடியமர்வு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில்முகாம்களில் உள்ள அகதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிப்பதே அந்த உத்தி. இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வைத் துரிதப்படுத்துமாறு சர்வதேச அளவில் விடுக்கப்படும் வேண்டுகோள்கள் தான் அரசாங்கத்துக்கு இப்போதுள்ள பிரச்சினை.

இப்படியான கோரிக்கைகள், அழுத்தங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கே அரசாங்கம் மீள்குடியமர்வு நிறைவடைந்து வருவது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்க முனைகிறது.

கடந்த வாரம் புதுடெல்லி சென்றிருந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, அங்கு செய்தியாளர்களிடம் பேசிய போது இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதாகவும் இன்னமும் 10,000 பேரே முகாம்களில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் அவரே அன்றிரவு பிபிசிக்கு அளித்த பேட்டியில் 14,000பேர் முகாம்களில் இருப்பதாகக் கூறினார். அதேதினம் இந்திய நாடாளுமன்றத்தில் சிறப்பு கவனயீர்ப்புத் தீர்மானத்தில் பதிலளித்துப் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாஇ இன்னமும் 35,000 தொடக்கம் 40,000 பேர் வரையில் முகாம்களில் இருப்பதாகக் கூறியிருந்தார்.

அதே தினத்தன்று அதாவது கடந்த 25ம் திகதி மெனிக் பாம் முகாமில் இருந்து 800 பேர் மீள்குடியமர்வுக்காக முல்லைத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதன் பின்னர் முகாம்களில் உள்ள அகதிகளின் எண்ணிக்கை 33.000 பேராகக் குறைந்திருப்பதாக அவற்றுக்குப் பொறுப்பான படை அதிகாரி கேணல் வடுகொடப்பிட்டிய தெரிவித்தாக அரசாங்க இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை தொடர்பாக ஒரே நாளில் வெளியான புள்ளிவிபரங்களில் தான் எவ்வளவு முரண்பாடுகள் குழப்பங்கள்.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இடம்பெயர்ந்த மக்கள் எவருமே இல்லை அனைவருமே மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர் என்று உலகத்துக்குச் சொல்லி இந்த விவகாரத்தை அப்படியே மூடிவைத்து விடவே ஆசைப்படுகிறது. எதிர்வரும் டிசெம்பருக்குப் பின்னர் இடம்பெயர்ந்த மக்கள் எவருமே இருக்கமாட்டார்கள் என்று தான் இந்தியா போன்ற நாடுகளுக்கு இலங்கை அரசு வாக்குறுதி கொடுத்துள்ளது.

ஆனால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினை ஒருபோதும் இந்தக்கால எல்லைக்குள் தீரப் போவதும் இல்லை. இலங்கை அரசினால் தீர்க்கப்படப் போவதும் இல்லை. இந்தப் பிரச்சினைக்கு வெறுமனே புள்ளிவிபரங்களால் தீர்வு காணமுடியாது. மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டதாக அரசாங்கம் கணக்குக் காட்டும் மக்களில் பெருமளவானோர் இன்னமும் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவில்லை அல்லது குடியமர அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

வன்னியில் உடையார்கட்டு, இந்துபுரம், விசுவமடு, மாத்தளன் ,கிருஷ்ணன் கோவிலடி, சாந்தபுரம், பரவிப்பாஞ்சான் போன்ற பல பகுதிகளில் மீளக்குடியமர படையினர் அனுமதிக்கவில்லை. அத்துடன் பல இடங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள போதும் மீள்குடியமர்வுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பியான சிறிதரன்.

மீள்குடியமர்வு என்பது முகாம்களில் உள்ள மக்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிப்பது என்றே இலங்கை அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கிறது. மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் இடம்பெயர்வுப் பிரச்சினைக்கு, குறுகிய காலத்துக்குள் தீர்வு கண்டு விட்டதாக நல்லபெயர் எடுப்பதற்காக இடம்பெயர்ந்த மக்களில் பெருளவானோர் நடுத்தெருவில் விடப்படுகின்றனர்.

அதற்காகவே தான் புள்ளிவிபரங்களில் கூட இத்தனை குளறுபடிகள் செய்யப்படுகின்றன. ஆனால் இந்தப் புள்ளி விபரங்கள் வெறுமனே வன்னிப் போரின் போது இடம் பெயர்ந்தவர்கள் பற்றியதே என்பது வெளியுலகில் பலருக்குத் தெரியாது.

அதற்கு முன்னர் இரண்டு. மூன்று தசாப்தங்களாக இடம்பெயர்ந்து வாழும் இலட்சக்கணக்கான மக்களின் மீள்குடியமர்வு இன்னமும் சாத்தியமாகவில்லை. யாழ்ப்பாணத்தில் வலிவடக்கு போன்ற உயர்பாதுகாப்பு வலயங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவில்லை. வடக்கு,கிழக்கின் ஏனைய மாவட்டங்களிலும் இதுபோல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன.

1980களின் நடுப்பகுதியில் மணலாறுப் பகுதிக் கிராமங்களில் இருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்களின் மீள்குடியமர்வு பற்றிய பேச்சையே காணவில்லை. யாழ்ப்பாணத்தில் இன்னமும் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்கள் உள்ளன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அதுபோல புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்களின் கணக்கையும் அரசாங்கம் மறைத்து விட்டது. இவர்களெல்லாம் போரினால் இடம்பெயர்ந்தவர்களே.

இவர்களை நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டுத் தான் அரசாங்கம் மீள்குடியேற்றம் முடிந்து விட்டது என்று கூறி நல்லபெயரைச் சம்பாதிக்க ஆசைப்படுகிறது. இந்த உண்மைகள் சர்வதேச சமூகத்துக்கு சரிவரத் தெரியாது. வவுனியா முகாம்களில் உள்ள மக்கள் அனைவரும் மீள்குடியேற்றப்படுவதுடன் இடம்பெயர்ந்தோரின் பிரச்சினை முடிவுக்கு வரப்போவதில்லை.

வவுனியா முகாம்களில் இருந்து, மீளக்குடியமர்த்துவதாகக் கூறி கொண்டு போய் விடப்பட்டவர்கள் சொந்த இடங்களில் குடியேற்றப்படாமல் நடுத்தெருவில் நிற்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கப் போகிறது. மீள்குடியமர்வு முற்றுப் பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டால், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் நீண்ட காலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களும் சொந்த இடங்களைப் பற்றிய கனவுகளை மறந்து விட வேண்டியது தான்.

அதுமட்டுமன்றி, இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யப்படாதுள்ளதால் இந்தியா போன்ற நாடுகளால் வழங்கப்படும் வீடமைப்பு உதவிகளையும் பெறமுடியாத அவலம் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இப்படியெல்லாம் இன்னமும் நடுத்தெருவில் நிற்கும் போது மீள்குடியமர்வு இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாக முன்னுக்குப் பின் முரணான புள்ளிவிபரங்களைக் கொடுத்து சர்வதேசத்தை ஏமாற்ற முனைகிறது அரசாங்கம்.

இலங்கை அரசின் இந்தப் புள்ளி விபரக் கணக்குகளில் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களின் நலன்கள் புதைக்கப்பட்டுள்ளதை சர்வதேச சமூகம் கண்டுகொள்ளுமா? அல்லது காணாதது போல விட்டு விடுமா?

– ஹரிகரன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.