கொழும்பு நோக்கிப் புறப்பட்ட ஜே.வி.பி. ஆதரவாளர்களுக்கு பொலிஸ் தடை

அரசியலமைப்புக்கான 18 வது திருத்தத்துக்கு எதிராக தமது கட்சியால் பொரளையில் நடத்தப்படும் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட தமது ஆதரவாளர்கள் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

அநுராதபுரம், புத்தளம், சிலாபம் உட்பட பல பகுதிகளிலுமிருந்தும் ஜே.வி.பி.யின் ஆதரவாளர்கள் பெருமளவுக்கு கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டதாகவும், ஆனால் வழியில் பொலிஸார் இவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டதாகவும் ஜே.வி.பி. வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.

அநுராதபுரத்திலிருந்து பெருமளவு ஆதரவாளர்களுடன் புறப்பட்ட பஸ் இரண்டாம் மைல் போஸ்ட் அருகில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஜே.வி.பி.யின் வட மேல் மாகாண சபை உறுப்பினர் அனுரா திசாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.

பஸ்ஸைத் தடுத்து நிறுத்திய பொலிஸார், பஸ்ஸில் வெடிபொருட்கள் இருக்கின்றதா எனச் சோதனையிடவேண்டும் எனத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து குண்டு செயலிழக்கச் செய்யும் படையினர் ஸ்தலத்துக்கு அழைக்கப்பட்டு பஸ் சோதனையிடப்பட்டது. இருந்தபோதிலும் வெடிபொருட்கள் எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை.

இதனையடுத்து மோம்ப நாய்களின் உதவியுடன் பஸ்ஸை சோதனையிட வேண்டும் எனக் கூறி பஸ்ஸை பொலிஸார் தடுத்துவைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.