“வட, கிழக்குப் பிரச்சினைகளை ஆய்வு செய்ய வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது” – அர்ஜுன ரணதுங்க!

கவலைகளுடன் வாழும் தமிழ் இளைஞர்களின் மனங்களில் உள்ள அச்சத்தை அகற்றுவதற்கும் விளையாட்டைப் பயன்படுத்தும் திட்டத்தை முன்னாள் இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க முன்வைத்திருக்கிறார்.

நாட்டில் ஒருபோதும் நாங்கள் இனவாத விடயத்தைக் கொண்டிருக்கவில்லை என்று அவர் இந்துப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். நாங்கள் எப்போதும் பயங்கரவாத விடயத்தையே எதிர்கொண்டிருந்தோம்.

இனவாதத் தன்மையான விடயத்தை நாங்கள் கொண்டிருந்தால் அவுஸ்திரேலியாவில் முத்தையா முரளிதரன் நாசமாக்கப்படுவதற்கு நாங்கள் இடமளித்திருந்திருக்க வேண்டும். ஆனால், முழுநாடுமே அவருக்கு ஆதரவளித்திருந்தது என்று அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் பிரதியமைச்சராகப் பதவி வகித்தவர் அர்ஜுன ரணதுங்க. அதன் பின்னர் ஜனநாயக தேசியக் கூட்டணியில் இணைந்துகொண்டார். ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணியின் எம்.பி.யாகத் தற்போது இருக்கும் அர்ஜுன ரணதுங்க விளையாட்டு மூலமாக வடக்கில் அதிகளவு விடயங்களை மேற்கொள்ள முடியுமென்று கூறியுள்ளார்.

விளையாட்டில் வட, கிழக்கு தமிழ் இளைஞர்கள் ஈடுபடுவதற்கான எதனையும் அரசாங்கம் செய்திருக்கவில்லை. நான் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த போது விளையாட்டுகளை ஏற்பாடு செய்த சிலரைச் சந்தித்திருந்தேன். நாட்டுக்காகத் தன்னால் விளையாட முடியுமா என்று 11 வயது பையன் ஒருவன் அறிந்து கொள்ள விரும்பினான். நிச்சயமாக அதனைச் செய்ய முடியும் எனவும் அதற்கு சிறந்த உதாரணம் முரளிதரன் என்றும் தெரிவித்தேன். ஆனால், அது எனது காலப்பகுதியிலேயே இடம்பெற்றதாகவும் இப்போது இல்லை என்றும் அப் பையன் கூறினான். 11 வயது பையன் ஒருவனிடம் இத்தகைய எண்ணப்பாடு அதிகரித்திருக்கிறது. இதற்கு நீங்கள் தீர்வுகாணவேண்டியுள்ளது என்று அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார்.

அரசியல்வாதிகளின் தவறுகளினால் புலிகள் உருவாக்கப்பட்டனர் என்ற வாதத்தை அர்ஜுன ரணதுங்க முன்வைத்திருக்கிறார். அதிகாரத்திற்கு வரவிரும்பிய அரசியல்வாதிகளே கடந்த காலத்தில் இதனை உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் மற்றொரு யுத்தத்தைத் தவிர்ப்பதற்கான தகுந்த பதிலை அரசாங்கம் வழங்குவதற்கான பொன்னான வாய்ப்பாக வட, கிழக்குப் பிரச்சினைகளை ஆய்வு செய்ய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். நாம் எமது கண்களைத் திறந்து வைத்திருக்க வேண்டிய தேவை உள்ளது. அப்பாவித் தமிழ் மக்களை நாம் சென்றடைய வேண்டும். அப்பகுதிகளிலுள்ள மக்களுடன் விடயங்களைக் கலந்தாராய வேண்டும். அரசியல்வாதிகளுடன் அல்ல. இதனை ஒழுங்கான முறையில் நீங்கள் செய்தால் இது மிகவும் வெற்றியளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

மீள்குடியேற்றமும் அரசியல் தீர்வும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படவேண்டுமென்ற கருத்தை அவர் கொண்டிருக்கிறார். புனர்வாழ்வு நடவடிக்கைகளில் தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்களை ஈடுபடுத்த வேண்டும் என்ற முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருப்பது பற்றி கேட்கப்பட்டபோது, தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்களுடன் மாத்திரமன்றி சகல எதிர்க்கட்சிகளுடனும் அவருடைய அபிப்பிராயங்களை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறியுள்ளார்.

தற்போதைய நிலைமையில் இந்தியா எத்தகைய பங்களிப்பை வழங்கவேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார் என்று கேட்கப்பட்டபோது, மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டுமெனத் தெரிவித்தார். தலையிடக்கூடாது ஆனால், ஆதரவளிக்க வேண்டும்.

இந்தியா மாத்திரமன்றி முழு உலகமுமே எமக்கு ஆதரவளிக்கின்றனர். ஆனால், சில சமயங்களில் தலையீடுகளும் உள்ளன. இலங்கை சுதந்திரமான நாடு. நாம் விரும்பும் வழியிலேயே அதனை நிர்வகிக்க வேண்டிய தேவை உள்ளது. மனித உரிமைகள் போன்ற விவகாரங்களுக்கு நாம் தீர்வு காண வேண்டியது நிச்சயமான விடயமாகும். சில நாடுகள் தமது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன. நாங்கள் விடயங்களைச் சரியாகச் செய்தால் பிரச்சினைகள் எதுவும் இருக்கப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.