உயிரைக் குடிக்கும் மர்ம பேய்: பாழடைந்த வீட்டில் திக்..திக்..திக்..

ஆள் அரவமற்ற ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கிறது அந்த பாழடைந்த ஓட்டு வீடு… புதர்கள் மண்டி, விட்டாலாச்சாரியா படத்து மந்திர குகையை நினைவுபடுத்துகிறது. பகல் நேரத்திலேயே அந்தப் பக்கம் போக பயப்படுகின்றனர் மக்கள். அவ்வளவு திகிலும் மர்மமும் இங்கு கொட்டிக்கிடக்குது.

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஆல்ரப்பட்டி கிராமம். சுமார் 250 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில்தான் மர்ம வீடு உள்ளது.

“பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னால இந்த வீடும் கலகலன்னுதான் இருந்துச்சு. ஒருநாள் வீட்ல இருந்த ஒருத்தர், திடீர்னு செத்துட்டாரு… அவரது சாவு எல்லாருக்கும் அதிர்ச்சியா இருந்துச்சு. அதனால அந்தக் குடும்பமே வீட்டை காலி பண்ணிட்டு வேற ஊருக்கு போயிட்டாங்க.. அன்னையில இருந்து இந்த வீட்டுக்கு யாருமே குடி வரல…” என்று வரலாற்றை விளக்கினார் ஊர் பெரியவர் ஒருவர். “பேய் இருக்குன்னு சொன்னதால ஏழு வருஷத்துக்கு முன்னாடி இந்த வீட்டை இடிக்க ஏற்பாடு பண்ணாங்க. வீட்டை இடிக்க கடப்பாரையும் கையுமா போனவரு மர்மமான முறையில இறந்துட்டாரு… ஏற்கனவே பீதியில இருந்த ஜனங்க, இந்த சம்பவத்துக்குப் பிறகு பகல்லகூட அந்தப் பக்கம் போறதில்ல” என்று கூடுதல் தகவலையும் சொன்னார்.

பாழடைந்த வீட்டில் பேய் வாசம் செய்வதாக கூறுகின்றனர். இதை உறுதிப்படுத்துவதுபோல, கிராமத்தில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் உள்ளன. கடந்த 2 ஆண்டில் மட்டும் 15&க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் இறந்ததாக சொல்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியை சேர்ந்த பொன்னியம்மாள் (40) என்பவர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென ரத்த வாந்தி எடுத்து இறந்து விட்டார். ஆரோக்கியமாக இருந்தவர் இப்படி பட்டுனு இறந்ததும் ஊரில் பயம் அதிகரித்துவிட்டது. சில நாட்களில் முருகன் என்பவரின் 11 மாத பெண் குழந்தை பிரியதர்ஷினி, சிவராஜின் ஒரு வயது குழந்தை நிதீஷ்குமார் உள்பட 3 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்துள்ளனர். இதுக்கெல்லாம் காரணம், பாழடைந்த வீட்டில் இருக்கும் பேய்தான் என்பது கிராம மக்களின் கூற்று.

“சொன்னா நம்ப மாட்டீங்க… கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க ஊர்க்கார இளவட்ட பய பெருமாளு, பகல் 12 மணிக்கு ஆல்ரப்பட்டி & ஒட்டப்பட்டி ரோட்ல பைக்ல வந்துட்டு இருந்தாரு. ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு இடத்துல திடீர்னு அவரு மேல ஏதோ வந்து விழுந்த மாதிரி இருந்துச்சாம். என்ன ஏதுனு பார்த்தா, சட்டையில கொத்தா ரத்தம் வந்து விழுந்திருக்கு. சுத்தி பார்த்தப்ப யாருமே தென்படலையாம். பதறிப்போய் வந்த பையன், ஒருவாரம் உடம்புக்கு முடியாம படுத்துட்டான்” என்று மற்றொரு சம்பவத்தை எடுத்துவிட்டார் ஒருவர்.

சமீபகாலமாக அடுத்தடுத்து நடந்த மர்மச் சாவு மற்றும் திகில் சம்பவங்களால் கிராம மக்கள் இரவு 8 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. நள்ளிரவில் நாய்களின் ஊளை சத்தமும், சுழன்று அடிக்கும் சூறாவளி காற்றும் கிராம மக்களை மேலும் உறைய வைக்கிறது. வேலைக்கு செல்பவர்களும், வெளியூர் செல்பவர்களும் விளக்கு வைப்பதற்குள் ஊருக்குள் வந்துவிடுகின்றனர். இப்போதெல்லாம் பகலிலும் இந்த கிராமம் வெறிச்சோடி கிடக்கிறது.

இதே நிலை நீடித்தால் எந்த வேலையும் பார்க்க முடியாது. ஏதாவது செய்து பேயை விரட்ட வேண்டும் என்று முடிவு செய்த மக்கள், கெளாப்பாறையில் உள்ள வேடியப்பன் சாமியை ஆல்ரப்பட்டிக்கு எடுத்து வந்து 3 நாட்கள் வீடுவீடாக சென்று சிறப்பு பூஜை செய்தனர்.

சாமி வீதியுலாவின்போது அருள் வந்து ஆடிய ஒரு பெண், கிராமத்து எல்லையில் ஆடு பலியிட்டு பூஜை நடத்தச் சொன்னார். உடனே ஊர் எல்லையில் கிடா வெட்டி பூஜை செய்யப்பட்டது. ‘வேடியப்பன் சாமி வீட்டுக்கு வந்திட்டு போனபிறகு பேய் அட்டகாசம் அடங்கியிருக்கு’ என்கின்றனர் சிலர். பேய் வருவதை தடுக்க வீட்டு வாசலில் தினமும் வேப்பிலை சொருகி வைக்கின்றனர். கதவில் நாமமும் போட்டு வைத்துள்ளனர். இருந்தாலும் அவர்களின் மனதில் திக்..திக்.. மறையவில்லை.

வேடியப்பன் கோயில் பூசாரி லட்சுமணன் கூறுகையில், “வேடியப்பன் சாமியை கண்டதும் பேய் தலைதெறிக்க ஓடிவிடும். இதனால் தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள்கூட இங்கு வருவார்கள். தங்கள் பகுதியில் பேய் மற்றும் காத்து கருப்பு அட்டகாசம் செய்ததாக கூறி, சாமி சிலையை எடுத்துச் சென்று பூஜை செய்துள்ளனர்” என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.