சட்டவிரோத கடல் பயணங்களை தடுக்க கனடாவில் புதிய சட்டம்!

இலங்கையில் இருந்து கனடாவுக்கு புதிதாக ஒரு படகு அல்லது கப்பல் எந்நேரமும் புறப்பட்டு வரலாம் என்று சர்வதேச நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில் இவ்வாறான மனிதக் கடத்தல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் புதிய சட்டம் ஒன்றை கனேடிய நாடாளுமன்றம் விரைவாக நிறைவேற்ற உள்ளது.

கனேடிய நாடாளுமன்றம் இம்மாத நடுப்பகுதியில் கூடுகின்றது. அப்போது இப்புதிய சட்டத்தை நிறைவேற்றுகின்றமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்திப் பேசுவார்கள் என்று அந்நாட்டின் CTV செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்புதிய சட்டத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் நிச்சயம் இருக்கும் என்றும் கனடாவின் ஆள்புல எல்லையை அடைவதற்கு முன்பாகவே சர்வதேச கடற்பரப்பில் வைத்து சட்டவிரோத படகுகளையும், கப்பல்களையும் தடுத்து நிறுத்துவதற்கான சட்ட அதிகாரத்தை கனடா பெற்றுக் கொள்ளுதல் , சட்டவிரோத பயணிகளை படகுகள், கப்பல்கள் போன்றவற்றில் ஏற்றி வருகின்ற கப்டன்மார், மாலுமிகள், சிப்பந்திகள் போன்றோருக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்குதல், படகுகளும், கப்பல்களும் பாரிய கடல்களை அடையும் முன்பாகவே இடைமறிக்கும் வகையில் இலங்கை போன்ற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளுதல் ஆகியனவே அம்முக்கிய அம்சங்கள் என்றும் தெரிகின்றது.

இந்நிலையில் இச்சட்டத்தை உருவாக்குகின்றமை குறித்து கனேடிய அமைச்சர்கள் மந்திராலோசனையில் அடுத்த வாரம் ஈடுபட உள்ளார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.