லண்டனில் தமிழ் மக்களை சந்தித்தார் டேவிட் மிலிபாண்ட்

பிரித்தானிய தலைநகர் லண்டனில் முன்னாள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரான டேவிட் மிலிபாண்ட் தமிழ்மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

நேற்று முன்தினம் லண்டன் வெஸ்மினிஸ்டர் சென்றல் ஹோலில் நடைபெற்ற தமிழ்மக்களுடனான பிரித்தானிய தொழில்கட்சியின் சந்திப்பின் போதே டேவிட் மிலிபாண்ட் கலந்துகொண்டு தமிழ்மக்களுடன் கலந்துரையாடினார். 

அன்று மாலை 7:00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான கீத்வாஸ், சிவோன் மக்டோனால், மைக் கப்ஸ், ஸ்ரெலா கிறிஸி, ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் கிளவுட் மோறஸ், ஜோன் றயன் மற்றும் ஈலிங் கவுன்சிலஸ் லீடர் யூலியன் பெல், ஆகியோர் கலந்துகொண்டு அங்கு கூடியிருந்த தமிழ் மக்களுடன் உரையாடினர்.

மாலை 8:10 க்கு மண்டபத்திற்கு வருகைதந்த டேவிட் மிலிபாண்ட் அங்கிருந்த மக்களுக்கு கைவாகு கொடுத்து மகிழ்க்ச்சியோடு உள்நுளைந்தார். டேவிட் மிலிபாண்ட் இன் வருகையை தொடர்ந்து தமிழ்பிரதிநிதிகள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகள் இடம்பெற்றன.

திரு. டேவிட் ஜோசப் அவர்கள் நிகழ்வை ஆரம்பித்துவைத்து அறிமுக மற்றும் வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் சார்பில் 14 வயது சிறுமியான செல்வி. சிந்து, செல்வி. கிருத்திகா, தொழில்கட்சிக்கான தமிழர்களின் அமைப்புத் தலைவர் திரு. சென் கந்தையா ஆகியோர் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து டேவிட் மிலிபாண்ட் உட்பட அங்கு வருகை தந்திருந்த முக்கிய பிரமுகர்களின் உரையும் இடம்பெற்றது.

கடந்த ஆண்டு வன்னிப்பகுதியில் மக்கள் மீது நடாத்தப்பட்ட கொடியபோரில் சிக்குண்டு இறுதி நாட்கள் வரை முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இருந்து அவலங்களையும், அழிவுகளையும் நேரில் கண்டும், அனுபவித்தும் வந்த பல மக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தமையும், அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடியதையும் காணமுடிந்தது.

குறிப்பாக வன்னிப்போரில் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தும், அதன் பின் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்ற பின் இராணுவத்தால் மூன்று மாத காலமாக பல இன்னல்களுக்கும் உள்ளாகி அதன் பின் பிரித்தானியா வந்தடைந்த செல்வி. தமிழ்வாணி, மற்றும் மே 15 வரை முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் இருந்து பின் இராணுவத்தினரிடம் சரணடைந்து தடுப்புமுகாம் வாழ்க்கையையும் அனுபவித்து தற்போது பிரித்தானியாவில் வந்து அகதிதஞ்சம் கோரியுள்ளவருமான கிருபா போன்றோருடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழ்மக்களின் பிரதிநிதிகளான நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழ் இளையோர் அமைப்பு, ரி லாப், உட்பட பல தமிழர் அமைப்புக்களும், பொதுமக்களுமாக சுமார் 500 க்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.