‘யாழ்ப்பாணத்துக்கு வரவேண்டாம்” : லண்டன் திரும்பிய குடும்பம் தமது திகில் அனுபவத்தை கூறுகிறது

லண்டனில் வசிக்கும் தமிழ் குடும்பத்தினர் அண்மையில் யாழ்ப்பாணம் சென்று விட்டு, சில நாட்களுக்கு முன்னர் லண்டன் திரும்பியுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் தமது சொந்த ஊரில் தங்கியிருந்த மிக குறுகிய காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட திகிலான அனுபவங்கள் குறித்து விபரித்துள்ளனர்.

இவர்கள் தமது சொந்த ஊரான கொக்குவிலில் உள்ள தமது வீட்டில் தங்கியிருந்த போது, 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முகமூடி அணிந்த நிலையில் மோட்டார் சைக்களில் வந்து தம்மை அச்சுறுத்தியாதாக தெரிவித்துள்ளனர்.

கைத்துப்பாக்கியுடன் வீட்டினுள்ளே புகுந்த நபர்கள், துப்பாக்கி முனையில் தம்மை அச்சுறுத்தியதுடன், வெளியார் யாராவது அந்த வீட்டில் வசிக்கிறார்களா? என கேட்டு வீட்டையும் சோதனையிட்டனர்.

சோதனையின் பின்னர் தாம் வந்தது பிழையான வீடு என்பதனை உணர்ந்த அவர்கள் தம்மிடம் மன்னிப்பு கோரியதன் பின்னர் அடுத்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர். உடனடியாக வீட்டில் இருந்த இளைஞர் ஒருவரை அந்தக் கும்பல் பலாத்காரமாக தமது மோட்டர் சைக்கிளில் ஏற்றிச் சென்றனர்.

கடத்திச்செல்லப்பட்ட  இளைஞர் தங்களைப்போலவே 15 வருடங்களின் பின்னர்தான் லண்டனில் இருந்து சொந்த இடமான யாழ்ப்பாணம் திரும்பியிருந்ததாக தாம் பின்னர் அறிந்ததாக தெரிவித்துள்ளனர்.
 
இதன் போது ஒரு தாய் நீங்கள் யாழ்ப்பாணத்திற்கு வரவேண்டாம் போய் விடுங்கள் என உரக்க கத்தியதாகவும் லண்டன் திரும்பிய குடு;ம்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
 
இந்த கடத்தல் இடம்பெற்றதன் பின்னர் அயலவர்களிடம் இருந்து, லண்டனில் இருந்து வந்தவர்கள் சில திடுக்கிடும் தகவல்களை அறிந்துகொண்டனர்.
 
அதாவது அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக செயற்படும் முன்னணி ஆயுத குழுவே இந்த கடத்தலை மேற்கொண்டதாக அறியவந்ததுடன், அந்த குழுவின் பெயரைக் அச்சம் காரணமாக குறிப்பிட மறுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
லண்டன் திரும்பியுள்ள குடும்பம் இதுவே யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெறும் உண்மையான நிலை என ஆதங்கப்பட்டு கொண்டனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.