அவசரகாலச்சட்டம் வாக்கெடுப்பின்றி ஒருமனதாக நீடிப்பு – வேடிக்கை பார்த்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் ஒருமனதாக அவசரகாலச்சட்டத்தை ஒரு மாதகாலத்துக்கு நீடித்துள்ளது.

இந்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படாமலேயே நிறைவேற்றப்பட்ட போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபையில் இருந்துள்ளனர்.

அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடிப்பதற்காக நாடாளுமன்றம் இன்று பிற்பகல் கூடியது.

அப்போது அரசியலமைப்பின் 18வது திருத்த யோசனை, அரசியலமைப்புக்கு முரணானதல்ல என்றும், அதை மக்கள் கருத்து வாக்கெடுப்புக்கு விடாமலேயே நடைமுறைப்படுத்தலாம் என்றும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சபையில் அறிவித்தார் சபாநாயகர் சமல் ராஜபக்ச.

இதையடுத்து ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சபையில் இருந்து வெளிநடப்புச் செய்து நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் அவசரகாலச்சட்டத்தை நீடிக்கும் பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அவசரகாலச்சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்படாமலேயே அது நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அப்போது சபையில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்துமாறு கோராததால் அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அண்மைக்காலங்களில் அவசரகாலச்சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.