வவுனியா, திருமலையில் இந்திய இராணுவத் தளபதி நிலைமைகளை அவதானிப்பு

சிறிலங்காவுக்கு ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் வி.கே.சிங் இன்று வவுனியா, திருகோணமலை மற்றும் அனுராதபுரம் பகுதிகளுக்கு சென்று நிலைமைகளை அவதானித்தார்.

இன்று காலை வவுனியாவுக்குச் சென்ற அவர் வன்னிப்படைகளின் தலைமையகத்தில் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது, வன்னியின் தற்போதைய நிலைமைகள், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு நடவடிக்கைகள், முன்னாள் புலிகள் இயக்கப் போராளிகளுக்கான புனர்வாழ்வு போன்றன குறித்து அவர் விசாரித்து அறிந்து கொண்டார்.

இதன் பின்னர் ஓமந்தையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய கண்ணிவெடி அகற்றும் அமைப்பின் நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்ட அவர், அங்கு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுடனும் கலந்துரையாடினார்.

வவுனியா பயணத்தை முடித்துக் கொண்ட ஜெனரல் வி.கே.சிங் அனுராதபுரத்துக்குச் சென்று ஜெயசிறி மகாபோதியில் வழியாடு நடத்தினார்.

அதையடுத்து திருகோணமலைக்குச் சென்ற அவர், கிழக்குப் பகுதி சிறிலங்கா இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் லலித் தவுலகலவையும், கிழக்கு மாகாண ஆளுனர் மொகான் விஜேவிக்கிரமவையும் சந்தித்ததுடன் திருகோணமலை எண்ணெய் குதங்கள், குரங்குப்பாலம், கடற்படை டொக்யார்ட் தளம், கடற்படை அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கும் சென்றிருந்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.