தென்ஆசியா பிராந்தியத்தை தனது காலடிக்குள் கொண்டுவர திட்டமிடுகிறது சீனா: மன்மோகன் கடும் தாக்கு

தென்ஆசிய பிராந்தியத்தை முழுமையாக தனது காலடியில் கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது. அதற்கு நாம் தகுந்த பதிலடி தருவோம் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தென்ஆசியா பிராந்தியத்தில் தனது ஆளுமையை அதிகரித்து, அந்த பிராந்தியத்தை முழுமையாக தனது காலடியில் கொண்டுவர சீனா முற்படுகின்றது. ஆனால் அதனை இந்தியா யதார்த்தமான வழிகளில் எதிர்கொள்ளும்.

சீனாவின் நடவடிக்கைகள் குறித்து நாம் எச்சரிக்கையாகவே உள்ளோம். சீனர்களின் நடவடிக்கைகள் புதிதாகவே உள்ளன. அவர்களின் நகர்வு எந்த திசையில் என்பதை கூறுவது கடினமானது. ஆனால் நாம் எதற்கும் தயாராக இருத்தல் வேண்டும்.

காஷ்மீர் போன்ற உணர்திறன் மிக்க பகுதிகளையும் பயன்படுத்திக்கொள்ள சீனா முற்படுகின்றது. அதன் மூலம் இந்தியாவை அடிபணிவு நிலைக்கு கொண்டுவர சீனா திட்டமிடுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் முதல் முதலாக வெளிப்படையாக கருத்து தெரிவித்திருப்பது முக்கியமானது என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு வருடங்களாக இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர மோதல்களின் வெளிப்பாடாக இந்திய பிரதமரின் கருத்துக்கள் அமைந்துள்ளன. இரு தரப்பு வர்த்தகங்கள் கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து 30 மடங்கு அதிகரித்துள்ளபோதும், அதிகாரப்போட்டிகள் உச்சம்பெற்று வருகின்றன.

மன்மோகன் சிங்கின் கருத்து தொடர்பில் சீனா வெளிவிவகார அமைச்சகம் இதுவரை கருத்து எதனையும் வெளியிடவில்லை. ஆனால் மன்மோகன் சிங்கின் கருத்துக்கள் உண்மையானவை என்பதை இந்திய பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனிடையே சீனா சிவப்பு எல்லைக்கோட்டை தாண்டிவிட்டதையும், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதையுமே மன்மோகன் சிங்கின் பேச்சு காட்டுவதாக புதுடில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின், கிழக்கு ஆசியா கற்கைகளுக்கான தலைவர் சிறீகாந் கொண்டாபள்ளி தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.