தமிழ்நாட்டில் வசித்துவரும் ஈழ அகதிகள் கட்டாயப்படுத்தி சிறிலங்காவுக்கு அனுப்பிவைக்கப்படமாட்டார்கள்

“தற்போது தமிழ்நாட்டில் வசித்துவரும் ஈழ அகதிகள் சிறிலங்காவிற்கு மீண்டும் திரும்பிச் செல்லுங்கள் என கட்டாயத்தின் பெயரில் அனுப்பிவைக்கப்படமாட்டார்கள். மீண்டும் இவர்கள் சிறிலங்காவிற்குத் திரும்புவது பாதுகாப்பானது என உணரும் வரைக்கும், ஊருக்கும் செல்வதற்கு விரும்பும் வரைக்கும் தமிழ்நாட்டில் தற்போதிருக்கும் சிறிலங்காவினைச் சேர்ந்த எந்த அகதியும் கட்டாயத்தின் பெயரில் அனுப்பி வைக்கப்படமாட்டார்கள்” என ’ஜேசுவின் அகதிப் பணி’ என்ற தொண்டு நிறுவனத்தின் தென்னாசியப் பிராந்தியத்திற்கான பணிப்பாளார் பிரகாஷ் லூயிஸ் அடிகளார் கூறுகிறார்.

புதிய வகையிலமைந்த இணைந்துவாழும் முறை ஒன்று உருவாக்கப்படவேண்டும் எனக்கூறும் இவர் சிறிலங்காவில் இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலை தொடர்பாக மேலும் கூறுகையில்,

நீண்ட பல ஆண்டுகளாகத் தொடர்ந்த யுத்தத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர்.

சிறிலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்குவந்துவிட்ட நிலையில் தமிழ்நாட்டின் ஈழ அகதிகள் கட்டாயத்தின் பெயரில் திருப்ப அனுப்பப்பட்டுவடுவார்கள் என்ற வதந்தி அண்மைய நாட்களில் உலாவுகிறது.

பல பத்தாண்டுகளாக இடம்பெற்ற போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாட்டினது வடக்குப் பகுதியில் நிலைமைகள் சாதகமானதாக இல்லை. போதிய உதவிகளோ அன்றில் தொழில் வாய்ப்புக்களோ இன்றியே மக்கள் மீள்குடியேறி வருகிறார்கள்.

வீட்டுக்குத் திரும்பியதுடன் அமைதியுடன் வாழலாம் என்ற கனவுடன்தான் பெரும்பாலான அகதிகள் ஊர் திரும்புகிறார்கள். ஆனால் ஊர் திரும்பிய இவர்களுக்கு இன்னமும் இதுபோன்றதொரு சூழல் கிடைத்துவிடவில்லை.

இடம்பெயர்ந்து வசிக்கும் மக்கள் எதனை விரும்புகிறார்களோ அதன்படி செயலாற்றவே நாம் விரும்புகிறோம். தமிழ்நாட்டிலுள்ள அகதிகள் விடயத்திலும் அவ்வாறுதான் நாம் நடந்துகொள்வோம்” என பிரகாஷ் லூயிஸ் அடிகளார் தொடர்ந்து தெரிவித்தார்.

”2009ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து தற்போது வரையில் தமிழ்நாட்டில் வசித்துவரும் 105,000 ஈழ அகதிகளில் வெறும் 500 பேர் மாத்திரமே அகதிகளுக்கான ஐ.நாவின் உயர் ஸ்தானிகராலயத்திடமிருந்து தமக்கான பயண ஆவணங்களைப் பெற்றிருக்கிறார்கள். இவ்வாறாக சிறிலங்காவிற்குத் திரும்பியவர்களில் பலருக்கு அங்கு உறவினர்களும், காணிகளும் வியாபார நிறுவனங்களும் உள்ளன”

சிறிலங்கா இராணுவத்தினரின் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் மத்தியில் இன்னமும் உள்ள தங்களது சொந்தக் கிராமங்களுக்குத் திரும்புவதற்கு இடம்பெயர்ந்து வசிக்கும் முல்லீம்கள் மற்றும் தமிழர்களில் பலர் அவ்வளவாக விரும்பவில்லை.
எவ்வாறிருப்பினும் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்ப விரும்பும் மக்களுக்கு தொண்டு நிறுவனங்களும் தொடர்புடைய ஏனைய தரப்பினரும் தங்களாலான உதவிகளைச் செய்யவேண்டும்.

”தமிழ்நாட்டில் வசித்துவரும் ஈழ அகதிகளின் விடயத்தில் எமக்கிருக்கும் அனைத்து ஏதுநிலைகளையும் ஆராயவேண்டும். பெரும்பாலான அகதிகள் தொடர்ந்தும் இந்தியாவிலேயே தங்கியிருப்பதற்கு விரும்புகிறார்கள். அவ்வாறாயின், இவர்கள் தொடர்ந்தும் தமிழ்நாட்டில் தங்கியிருப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதிக்கவேண்டுமென நாம் அரசாங்கத்தினைக் கோரவேண்டும்”

”ஏனையவர்கள் தங்களது விரும்பத்திற்கு ஏற்ப சிறிலங்காவிற்குத் திரும்பலாம். சில சமயங்களில் குறிப்பிட்டதொரு குடும்பத்தினை எடுத்துக்கொண்டால் ஒருசிலர் தொடர்ந்தும் தமிழ்நாட்டிலேயே தங்கியிருக்க விரும்புவார்கள் ஏனையவர்கள் ஊர்திரும்ப விரும்புவார்கள். வேறுசிலர் இந்தியாவிலிருந்து வேறு ஏதாவது மேற்கு நாடுகளுக்குச் செல்லும் எண்ணத்தில் இருப்பார்கள்” என்றார் அவர்.

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக இத்தாலி போன்ற மேற்கு நாடுகள் பெருமெண்ணிக்கையான இலங்கையர்களை உள்வாங்குகிறார்கள்.

அதேநேரம் தமிழ்நாட்டிலுள்ள ஈழ அகதிகள் முகாம்களில் ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் திட்டங்கள் அனைத்தும் சரியாக முன்னெடுக்கப்படுவது உறுதிப்படுத்தப்படவேண்டும். இந்த அகதிகளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

அடிப்படைத் தங்குமிட வசதிகள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட நிதியுதவிகள் என்பன இவர்களுக்குக் கிடைக்கிறது. அத்துடன் இங்கிருக்கும் தொழிலாளர்கள் பல்வேறுபட்ட தொழில்களிலும் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது என ஜேசுவின் அகதிப் பணி என்ற தொண்டு நிறுவனத்தின் தென்னாசியப் பிராந்தியத்திற்கான பணிப்பாளார் பிரகாஷ; லூயிஸ் அடிகளார் தொடர்ந்து கூறுகிறார்.

எவ்வாறிருப்பினும் கடற்கரையோரங்களில் இருக்கும் சில அகதி முகாம்களில் நடமாடும் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதோடு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட சில அகதி முகாம்களின் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது.

’ஜேசுவின் அகதிப் பணி’ உள்ளிட்ட குறிப்பிட்ட சில தொண்டுநிறுவனங்களின் உதவிகளும் இந்த அகதிகளுக்குச் சென்று சேர்கிறது. தொழிற்கல்வி சிறிய வியாபாரத்தினை ஆரம்பிப்பதற்கான ஆதரவு ஆகியவற்றை எங்களது அகதிப்பணி மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டு மக்களும் அங்குள்ள அகதி முகாம்களில் வாடும் ஈழ அகதிகளும் இனத்தால் ஒன்றுபட்டிருந்தாலும் அவர்களுக்கிடையேயான இடைத் தொடர்புகள் குறைவானதாகவே இருக்கின்றன. முகாம்களுக்குத் தங்குதடையின்றிச் சென்றுவருவதற்கான அனுமதி மறுக்கப்படுவதும் இதற்கு ஒரு காரணம்.

மக்களின் அபிவருத்தி மற்றும் அவர்களது மீளெழுச்சித் திட்டங்களில் சிங்கள மற்றும் தமிழ் மதகுருக்கள் ஒன்றாக இணைந்து பணிசெய்து வருகிறார்கள். இன மற்றும் மத ரீதியிலான வேறுபாடுகளைக் களைவதற்கு இதுபோன்ற முனைப்புக்கள் பெரிதும் உதவும்.

இனங்களின் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான நம்பிக்கையினைத் தரும் சமிக்கையாக இது பார்க்கப்படுகிறது. நாளைய சிறந்த எதிர்காலத்திற்கும் புதியதொரு கூடிவாழும் முறையினை ஏற்படுத்துவதற்கும் இது பெரிதும் உதவும்’ என்றார் அவர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.