அரசியலமைப்புத் திருத்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது – நாடாளுமன்ற உறுப்பினர்கள் நழுவல்?

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று அரசியலமைப்பின் 18வது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

அரசியலமைப்பின் 18வது திருத்தம் தமிழ்மக்களுக்கு ஆபத்தானது என்பதால் அதற்கு எதிராக வாக்களிப்பது என்று நேற்றுமுன்தினம் கொழும்பில் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் எடுத்திருந்தனர்.

ஆனால் இந்தக் கூட்டத்தில் இரா.சம்பந்தன், சி.யோகேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சிறிதரன், வினோ நோகராதலிங்கம், போன்றோர் கலந்து கொள்ளவில்லை.

இரா.சம்பந்தன் மற்றும் அடைக்கலநாதன் ஆகியோர் இந்தியாவிலும், யோகேஸ்வரன் லண்டனிலும், சிறிதரன் ஜேர்மனியிலும், வினோ நோகராதலிங்கம் மன்னாரிலும் இருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

எனினும் கூட்டத்தில் பங்கேற்காத நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடியே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்தநிலையில், எதிர்வரும் சனியன்று நடைபெறவுள்ள உலகத் தமிழர் பண்பாட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சிறிதரன், அரியநேந்திரன் ஆகியோர் ஜேர்மனிக்குச் செல்லவுள்ளனர்.

இதனால் சுமார் ஏழு வரையான நாடாளுமன்ற உறுப்பினர்களே இன்று மாலை நடைபெறவுள்ள அரசியலமைப்பின் 18வது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பின் போது சபையில் இருப்பர் என்று தெரியவருகிறது.

முக்கியமானதொரு வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் அதற்கு எதிராக வாக்களிப்பதெனத் தீர்மானித்து விட்டு பலரும் வெளிநாடு சென்றிருப்பது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலரும் வெளிநாடு சென்றுள்ள நிலையில் எதிராக தாம் மட்டும் வாக்களிப்பது தமது எதிர்காலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுமா என்று சிலர் அஞ்சுவதாக தெரிகிறது.

இதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன அரசியலமைப்பின் 18வது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் அவருடன் நேற்று தொடர்பு கொண்டு கேட்டபோது தான் எப்படி வாக்களிப்பதென்று இன்னமும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கக் கூடாது என்று கேட்டவர்கள் பலர் வெளிநாடு சென்று விட்டதாகவும், இந்தநிலையில் தனது நிலைப்பாடு என்னவென்று தான் இன்னமும் முடிவு செய்யவில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.