தமிழீழ அரசின் பிரதிநிதிகளுக்கு ஒரு பகிரங்க கடிதம்!

பலருடன் பேசி எனதும் என்னை சுற்றியுள்ள மக்களினதும் கருத்தாக இந்த மடலை வரைகிறேன். குறை ஏதும் இருந்தால் அல்லது சொற்பிழை இருந்தால் மன்னித்தருள்க. இந்த மடல் உங்களில் பலருக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக, தமிழாராய்ச்சி என்ற இந்த மின்னஞ்சல் குழுமத்தில் எழுதுகிறேன்.

ஆயுத போரின் வெற்றிகளைப் பார்த்து, தேசிய தலைவரின் உறுதியையும் கண்டு வியந்து இன்றோ நாளையோ எங்கள் நாடு எங்கள் கையில் என கனவு கண்ட பலரில் நானும் ஒருவன். காட்டி கொடுப்புகளுக்கும், பணத்தாசை பெண்ணாசை பிடித்த சில நாய்களுக்கும், தன் தாலி அறுந்தாலும் தமிழன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று உறுதியாய் இணைந்த சிங்கள தேசத்தின் கொள்கைக்கு உரம் சேர்த்த சீன ஆதிக்க வெறியும் இந்திய சதிக்கும் எதிராக எங்கள் வீரர் சளைக்காமல் நின்றதையும் களமாடி தம்மால் ஆனதை, மனித மனதின் உச்சகட்ட உறுதியில் போராடிக் காட்டிவிட்டனர். இத்தனை பலமான நாங்கள் எப்படி உடைந்து போனோம் என்று பாராளுமன்ற சதுக்கத்தில் கண்ணீரோடு “நாங்களே புலிகள் We are Tamil Tigers” என்று உணர்ச்சி வெறியில் கத்தியும் பார்த்தோம்.

இப்படி நாங்கள் உடைந்து அடங்கிய போது எங்களுக்கெல்லாம் ஒரு வெளிச்சமாய் உருவானதே இந்த தமிழீழ அரசு. உருத்திர குமாரன் மக்களிடம் வந்து வாழக்கூடாது, நங்கள் ஈழத்தில் வீழ்ந்தால் உலகெங்கும் எழுவோம் என கூறிய போது எத்தனை நம்பிக்கை. எல்லாரிடமும் சொல்லி வைத்தேன், என்ன செய்ய வேணும் என்றாலும் சொல்லுங்கோ என்று. அச்சத்தை மறந்து, வேலை பழுவை கரையில் வைத்துவிட்டு இந்த தேர்தலில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று என்னாலானதை செய்தேன். தேர்தலுக்கு வேட்பாளராக வந்த ஒவ்வொருவரையும் நாங்கள் பாராட்டினோம். என்னை பொறுத்த வரை தமிழீழ அரசின் தேர்தலுக்கு முன்வந்த அத்தனை பெரும் வென்றவரே! அதுவும் தேர்தல் நடத்திய ஆணையாளர் தொட்டு கடைசி தொண்டன் வரை அத்தனை பெரும் வென்றவரே!

அப்போது கூட சிலர் தமிழீழ தேர்தலில் கட்சி என்று தொடங்கிய போது, எங்களுக்கெல்லாம் மீண்டும் நம்பிக்கை சற்றே தளர்ந்து விட்டது. நாடே இல்லாத அரசு, அதுவும் தொடங்கப்பட முன்னரே இவர்கள் பிரிந்து நிற்கிறாரே என்று கவலை பட்டோம்! சரி இடர்கள் வரலாம் ஆனாலும் தளரக்கூடாது, இதுதான் தலைவர் தந்த பாடம் என்று நம்பி தொடர்ந்தோம். இன்னும் சிலர் அரசை முற்று முழுதாக எதிர்த்த போது, வந்த கோபம் அளவுக்கு மீறியது. யார் இவர்கள்? மக்கள் போராட்டம் வேண்டும் என்று முழங்கியவர்கள், ஏன் மக்கள் போராட முன்வந்தபோது பயப்படுகிறார்கள்? இவர்களையும் ஒதுக்கி தேசிய பயணம் தொடர்வோம் என்ற உறுதியோடு தமிழீழ அரசை நோக்கினோம்!

தேர்தல் நடந்தது, பலரும் வென்றார்கள் சிலர் தேர்தலில் வெல்லவில்லை, ஆனால் மக்கள் மனங்களில் நிலைத்து விட்டனர். இன்றும் மக்கள் போராட்டங்களில் இவர்களை காணக்கூடியதாக இருப்பது, இவர்கள் தோற்கவில்லை என்பதற்கு எடுத்துகாட்டு. தேர்தலில் பெரிய அளவில் மக்கள் பங்களிக்காமைக்கு சிலர் செய்த சதியும் சிறிலங்கா அரசின் அச்சமும் காரணமாக அமைந்தாலும் வென்றவர்கள் நீங்கள் எங்கள் தலையை நிமிர்த்துவீர்கள் என்ற நம்பிக்கையில் மனதை திடப்படுத்திக் கொண்டோம்!

நாடு கடந்த அரசின் அமர்வு நடந்தேறி சில காலத்தின் பின் இன்று சில செய்திகள் கசிகின்றன. அவற்றை கூட நாங்கள் பொருட்படுத்தாமல் உங்கள் முகங்களைப் பார்க்கிறோம்! நீங்கள் யாரையும் பின்பற்றத் தேவை இல்லை, ஏன் என்றால் நீங்கள் வாக்குகளால் (சில இடங்களில் வாக்குகள் பிழைத்து போனாலும்) தெரியப்பட்டவர்கள். இன்றைய திகதியில் நீங்கள் இந்த அரசை முன் நகர்த்த வேண்டும்! தேசிய கொள்கையை கைவிடும் எவரையும் உங்கள் பலத்தால் மவுனிக்க வைக்க முடியும், தூக்கி எறியவும் முடியும்! ஏன் என்றால் அவர்களுக்கு இல்லாத பலத்தை இந்த தேர்தல் உங்களுக்கு தந்து இருக்கிறது! ராஜதந்திரம் தேர்ந்த, தேசிய தலைவரே ஆலோசகராக தேர்ந்தடுத்த தலைவர்களை பலப்படுதுங்கள். தேசிய தலைமை நியமித்ததனால் தானே புலம் பெயர் நாட்டில் சிலரை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்? ஆயுதப் போரில் இவர்களை நியமித்த தலைவர் அரசியல் போரில் யாரை நியமித்தார் என எல்லாருக்கும் தெரியும்! கல்வி அறிவில் நிரம்பிய ஒரு இனம் எங்கள் இனம், அதனால் உங்கள் மூளையை உபயோகித்து புலம் பெயர் நாட்டில் எங்களுக்கு பலம் சேர்க்கக் கூடியவரை இனம் கண்டு தமிழீழ அரசைப் பலமாகுங்கள்!

பலருக்கு இன்றைக்கு உள்ள கேள்வி நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதே. நீங்கள் எந்தப் பக்கம்? தமிழீழ அரசை பலமாக்கவா இல்லை அழிக்கவா போட்டியிட்டீர்கள்? இது ஜனநாயக அரங்கம்! நீங்கள் இதை சிதைக்க சென்று இருந்தால் அதையும் உரக்க சொல்லலாம்! ஈழ வேந்தன் அய்யாவின் சில மடல்கள், லண்டனிலுள்ள சந்தோஸ் என்ற இளம் தலைவனின் சில முயற்சிகள் என்று நாங்கள் சிலரது நடவடிக்கைகள் பற்றி அறிந்து இருந்தாலும் பலர் அமைதியாக இருபதாகவே தோன்றுகிறது. சில வேளை அவர்களுக்கு தகுந்த ஊடக உதவிகள் கிடைப்பதில்லையோ என்னவோ? ஒருகாலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடமும் இதைத்தான் கூறினோம். பழைய தலைவர்கள் பின்னால் இருந்து வழிப்படுத்த புதியவர்களை தேர்தலில் விடுங்கள் என்று. புலத்திலும் சில புதிய இளையோர் சிறப்பாக செய்கிறார்கள் போல தோன்றுகிறது.

அதனால் தயவு செய்து ஒவ்வொரு தமிழீழ அரசின் பிரதிநிதியும் இந்த கால பகுதியில் என்ன செய்தீர்கள் என மக்களுக்கு கூற வேண்டும்!

உங்கள் நிலைபாட்டை தெளிவாக கூறுங்கள்! உங்கள் அமைதி இன்னும் வதந்திகள் பரவ வழி வகுக்கும்! அதனால் நீங்களே முன் வந்து மக்களை வழிப் படுத்துங்கள்! தமிழீழ அரசில் கட்சிகள் வேண்டாம், நீங்கள் முன்னுதாரணமாக கைகோர்த்து, தேசியத் தலைவரை மனதில் நிறுத்தி, தாயக பயணத்தை தொடர்வோம் என ஒற்றை குரலில் உரக்க கூறினால், நிச்சயம் மக்களும் பின் தொடர்வர்! ஒழித்து நின்று உங்களை இயக்கும் சக்திகளிடம் என்ன வேண்டும் அவர்கள் என்ன நோக்கம் கொண்டவர்கள் என கேளுங்கள்! அவர்களும் தமிழீழ பயணத்துக்கு தயார் என்றால், அவர்களை பின்னால் இருந்து வலு சேர்க்க சொல்லுங்கள்! சில இடங்களில் அரசியல் பலம் இருப்பவரை முன்னால் அனுப்புங்கள்! ஒரு கதிர்காமரை தமிழர் என்றாலும் சரியான இடத்தில வைத்து சரியாக உபயோகித்த சிங்கள பேரினவாதத்தின் கதையை நீங்களும் அறிவீர்கள் அன்றோ? இங்கே யார் என்பது முக்கியமல்ல, அவரை முன்னே நிறுத்துவதால் எங்கள் பயணம் இலகுவாகிறதா? எங்கள் குரல் உரக்கிறதா? எங்கள் போராட்டம் வலுவடைகிறதா? …உடனே அவரையும் இணையுங்கள்!

சிங்களவரான பிரையன் செனிவரத்னே போன்றோரின் ஆதரவு எங்கள் உரிமை போரின் நியாயத்தை உலக்குக்கு இலகுவாக எடுத்து செல்லும். எல்லோரையும் இணையுங்கள், தேர்தலில் தவறுகள் நடந்தால், மீண்டும் அதை நடாத்தி, எங்கள் நேர்மையை உலகுக்கு எடுத்து கூறுங்கள்!

இது எங்கள் போரின் புதிய வடிவம்! ஆயுதம் கடத்திய கே.பி யை அவ்வளவோடு நிறுத்தி வைக்கும் அறிவு வேண்டும்! அவரை வைத்து அரசியல் செய்ய முடியாது! சண்டையில் வீரம் காட்டிய கருணாவிற்கு தாய்லாந்து விலை மாதரை காட்டினால், தன் தாயை விற்று நிற்கிறான்! அதனால் அவர் அவரை சரியான இடத்தில் வைத்திருப்போம்! தவறுகளை மீண்டும் செய்திருப்போம்!

தேசிய தலைவரை தவிர எந்த தனி மனிதரையும் நம்பாமல், எவரை முன் வைத்தால் எங்கள் நோக்கம் ஈடேறுமோ அவரை முன் நிறுத்துவோம்!

இன்றே உங்கள் பணியை தொடங்குங்கள்! உங்கள் பணிகளை உரக்க கூறுங்கள், அதனால் மக்கள் அரசு மேல் நம்பிக்கை வைப்பர்!

உங்களை நம்பி தங்கள் உயிரை தந்த அந்த ஐம்பதினாயிரம் மாவீர தெய்வங்களை வணங்கி, இனவெறியின் ஆட்டத்தில் கொல்லப்பட்ட இருநூறாயிரம் உயிர்களுக்கு நியாயம் வேண்டி போராட காலம் உங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பை வழங்கி நிற்கிறது!

அந்த பெரிய பொறுப்பை சிறப்பாக நடாத்தி, எதிர்க்கும் சக்திகளின் வாயை அடக்கி, வெல்வோம் என உரக்க கூறிடுவீர்!

தமிழீழ அரசின் பிரதிநிதிகளே உங்களுக்கு அந்த மாவீரரின் ஆசியும், மண்ணை உயிராய் நேசிக்கும் போராளிகளது பலமும், மண்ணை மீட்போம் என உறுதி கூறி நிற்கும் மக்களது சக்தியும் என்றும் துணை நிற்கும்!

சில மூட சக்திகளிற்கு விலை போவதும், ” இல்லை என்னை மக்கள் தெரிவு செய்து உள்ளனர், அவர்கள் நம்பிக்கைக்கு துரோகம் செய்ய மாட்டேன்” என உரக்க கூறுவதும் உங்கள் கைகளிலே!

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் !

அயதுல்ல கொமேனி போல, பிரித்தானிய பிரபுக்கள் சபை போல, முன்னர் போராட்டத்தில் முன் நின்றவர்கள் வழிப்படுத்த, புதியவர்கள் இணைக்கப்பட வேண்டும்!. புலிகளின் புலம் பெயர் தலைமைகள் பின்னால் நின்று தமிழீழ அரசை பலப்படுத்த முன்வரவேண்டும்!

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.