இலங்கையை ஆள்வது காட்டுச்சட்டமா நாட்டுச்சட்டமா? – சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

நேற்று 7.9.2010 அன்று அவசரகால நீடிப்புப் பிரேரணையின்மீது பாராளுமன்றத்தில் விவாதம் இடம் பெற்றது. அப்போது அதில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோபூர்வ பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கலந்துகொண்டு உரையாற்றினார். அவரது உரையின் சுருக்கம் வருமாறு.

அரசு 99வீதமான மக்கள் மீள்குடியேற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. ஆயினும் இன்றுவரை மீள்குடியேற்றப்பட்ட மக்களில் யாராவது நிரந்தரமாகக் கட்டப்பட்ட வீட்டில் குடியமர்த்தப்பட்டுள்ளனரா? ஏதிர்வரும் மாரிக்காலத்தில் வன்னி மக்கள் அனைவருமே மற்றுமொரு இடப்பெயர்வைச் சந்திக்கப் போகின்றனர். இவர்கள் சென்று தங்குவதற்குப் பாடசாலை,பொதுநோக்கு மண்டபங்கள் என்பவைகள் கூட கூரைகள் போட்டுத் தயார் படுத்தப்படவில்லை. எமது மக்களின் உலர் உணவுப்பொருள் உட்பட அவர்களிடம் எஞ்சியுள்ள அனைத்துமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படப்போகின்றது. மாரியில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்து அமைச்சர்களோ அதிகாரிகளோ எவருமே அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.

திருகோணமலையில் தனக்குச் சொந்தமான 40பேர்ச் காணியொன்றில் தனியாக வசித்து வந்த ஒரு முதியவரிடம் சிலர் சென்று இந்தக்காணியை விட்டு நீங்கள் வெளியேற வேண்டும் இங்கு நாங்கள் உணவுவிடுதி கட்டப்போகின்றோம் என்று சொல்லி அவரை அவரது காணியிலிருந்து அடித்து விரட்டியுள்ளனர். காலில் அடிபட்ட நிலையில் அவர் காணியின் வேலியூடாகத் தப்பி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற வேளையில் அவரை அடித்தவரும் அங்கு இருந்திருக்கிறார். அது அமைச்சரின் செயல் என்று சொல்லி அவரது முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இலங்கையில் நிலவுவது காட்டுச் சட்டமா? நாட்டுச்சட்டமா? என்று கேட்டதற்கு அவையில் இருந்த அமைச்சர் ஒருவர் அது நான் இல்லை என்று சொல்லியுள்ளார். வடக்கு-கிழக்கில் இப்படி ஏராளமான காணிகள் அபகரிக்கப்படுகின்றன.

பாரம்பரியமாக எமது மக்கள் வாழ்ந்து வந்த மன்னார் முள்ளிக்குளத்தில் இன்று கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுபோன்று ஏராளமான முகாம்கள் உருவாகும் என்றும் சொல்லப்படுகின்றது. அப்படியானால் இங்கு வசித்துவந்த எமது மக்களின் எதிர்காலம் என்ன? அவர்களது வாழ்வாதாரத்திற்கு என்ன வழி?

வடக்கில் அரச ஊழியர்களுக்கான பணி நியமனங்களில் அரசியல் குறுக்கீடுகள் இருக்கின்றன. அமைச்சர்களின் சிபாரிசுகளின் பேரில் பணிநியமனங்கள் வழங்கப்படுவதாகத் தகவல்கள் வருகின்றன. அமைச்சர்களின் வெற்றிக்குத் தேர்தல் பணியாற்றியவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. இதன்போது அமைச்சர் டக்ளஸ் குறுக்கிட்டு அது நான் இல்லை என்று சொல்ல தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம் என்றார் சுரேஷ். அவர் மேலும் தனது உரையில்,

மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு செல்லும் பாதையில் ஒரு சோதனைச் சாவடி உள்ளது. அங்கு அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு அமைச்சின் அனுமதிப்பத்திரம் இருக்கின்றதா என்று விசாரித்து சரிபார்த்த பின்னரே அச்சாலையில் பயணிப்பதற்கு அனுமதியளிக்கப்படுகின்றது. என்னையும் நீண்டநேரம் காக்க வைத்த பின்னரே அனுமதித்தனர். இதனால் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள வாகனங்கள்கூட அந்த வழியில் செல்ல முடியாமல் உள்ளது. ஆனால், அந்த வழியாக தினமும் ஏராளமான லொறிகளில் எவ்விதத் தடையுமின்றி எமது மக்கள் பாவித்த வாகனங்கள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் கால்நடைகள் என்பன கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன.

இது ஏதோ ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் நடக்கவில்லை. முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பிரதேசத்தில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் காட்டில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமிற்கும் றெட்பானா பாதுகாப்புச் சோதனைச் சாவடிக்கும் இடையில் அந்த மக்கள் உபயோகித்த பொருட்கள் அவர்கள் கண்முன்னேயே விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக்கொள்ளைகளை உறுதிப் படுத்துவதற்கான ஏராளமான புகைப்படச் சான்றுகள் என்னிடம் இருக்கின்றன. நான் நேரில் சென்று அந்த இடத்தைப் பார்வையிட்டுள்ளேன். இதன்போது டக்ளஸ் குறிக்கிட்டு புகைப்படங்களைத் தருமாறு கோரினார். தருவதாகச் சொல்லியுள்ளேன் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.