புதிய சட்டமூலம் இன்று நிறைவேற்றப்பட்டது!

18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு அதிகாரத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் 144 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் சமல் ராஜபக்ச சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 143ஆனது.

ஐக்கிய தேசியக் கட்சியின் திகாம்பரம் மற்றும் பிரபா கணேஷன் ஆகியோர் அரசுக்கு ஆதரவு தெரிவிக்க ஆளுங் கட்சியின் ஆதரவு எண்ணிக்கை 145ஆக அதிகரித்தது.

இதனை அடுத்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தமது உறுப்பினர்கள் எண்மருடன் ஆதரவு வழங்க அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 153ஆக அதிகரித்தது.

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறுவர் வழங்கிய ஆதரவுடன் ஆளுங் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எண்ணிக்கை 159ஆக அதிகரித்தது.

இறுதியாக இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா ஆகியோரின் ஆதரவைப்பெற்ற அரசு 161ஆக எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டது.

இன்றைய வாக்கெடுப்பினை புறக்கணிக்கப்போவதாக ஐ.தே.க அறிவித்து பங்கெடுக்காத நிலையில் எதிராக 17 வாக்குகள் மட்டும் அளிக்கப்பட்டது. இந்  நிலையில் புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பத்து வாக்குகளும், சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியின் ஏழு வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. புதிய சட்டமூலம் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகின்றது என்று அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.