நாடாளுமன்றில் சுமந்திரன் உரையாற்றிய பொழுது “புலி”,”புலி” எனக் கத்திய ஆளுங்கட்சி எம்.பிக்கள்!

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் ஆற்றிய உரையினால் ஆவேசப்பட்ட அரச தரப்பினர் அவரைப் பார்த்து “கொட்டி”, கொட்டி” என (புலி, புலி) என ஒன்றாகக் கோஷமெழுப்பியதுடன் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டனர்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம் தொடர்பான விவாதம் இடம்பெற்றது. சட்டமூலத்தைப் பிரதமர் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து சுமந்திரன் உரையாற்றிய போது சபையில் கூச்சல்களும் குழப்பங்களும் ஏற்பட்டன.சுமந்திரனின் உரைக்கு அரச தரப்பைச்

சேர்ந்த சுசில் பிரேம ஜயந்த, டிலான் பெரேரா, பைசர் முஸ்தபா, அஸ்வர், லலித் திசாநாயக்க மேர்வின் சில்வா மஹிந்தானந்த அளுத்கமகே போன்றோர் தொடர்ந்து குறுக்கீடுகளைச் செய்து கொண்டிருந்தனர். அஸ்வர், பைசர் முஸ்தபா, ரஜீவ விஜேசிங்க ஆகியோர் அடிக்கடி ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

அரச தரப்பினரின் குறுக்கீடுகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் சுமந்திரனும் பதிலடி கொடுத்துக் கொண்டே தனது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அரசதரப்பினர் பலர் ஒன்றாகச் சேர்ந்து “கொட்டி” “கொட்டி” என உரத்து கோஷமெழுப்பினர். அப்போது சுமந்திரன் நீங்கள் கருணாவை சபைக்குள் அழைக்கின்றீர்கள் போல் உள்ளது என்று கூறினார்.

தனது உரையில், ஐ.தே.க.விலிருந்து அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.பி.க்கள், பிரபாகணேசன், திகாம்பரம் போன்றவர்களின் கட்சித் தாவல்களைப் பற்றியும் சுமந்திரன் குற்றம்சாட்டினார். இவர்களுக்கு வாக்களித்த மக்கள் தமது தலையைக் கொண்டு சென்று பாராங்கல்லில் தான் மோத வேண்டும் என்றார். சுமந்திரனின் இவ்வாறான குற்றச்சாட்டுகளினால் ஆவேசமடைந்த அரச தரப்பினர் பலர் சுமந்திரனுடன் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டனர். அரசதரப்பு பின் வரிசை உறுப்பினர்கள் சிலர் முன்னுக்குப் பாய்ந்து வந்து சுமந்திரனை எச்சரிக்கை செய்தனர். இன்னம் சிலர் இருந்து கொண்டு “கொட்டி”கொட்டி” என உரத்துக்கத்தினர். அப்போது சுமந்திரன் ஏன் ஒளித்திருந்து கூறுகின்றீர்கள் தைரியமானவர்கள் என்றால் எழுந்து நின்று கூறலாமே என்றார். உடனடியாக பல அரச தரப்பினர் எழுந்து நின்று “கொட்டி”,கொட்டி”எனக் கோஷமெழுப்பினர்.

சபையில் சர்ச்சை பெரிதாகவே வெளியே நின்ற பல அரச தரப்பினர் உள்ளே ஓடிவந்து தமிழ்க் கூட்டமைப்புக்கு எதிராகக் கூச்சலிட்டனர். இவர்களுடன் சுரேஷ் பிரேமச்சந்திரன் அப்பாத்துரை விநாயக மூர்த்தி, மாவை சேனாதிராஜா ஆகியோர் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இவ்வேளையில் திகாம்பரம் எம்.பி. ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி சுமந்திரனைக் குற்றம்சாட்டியதுடன் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குமாறும் கோரினார்.

சுமந்திரனுக்கு இடையூறு செய்ய வேண்டாமென்று சபாநாயகர் அடிக்கடி அறிவுறுத்திக் கொண்டிருந்த போதும் அவரின், உரை முடியும் வரை அரச தரப்பினர் குறுக்கீடுகளைச் செய்து கொண்டே இருந்தனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.