அறிக்கை ஒன்றை தயாரித்து வழங்குமாறு இந்தியாவிடம் அமெரிக்கா கோரியுள்ளது.

சிறிலங்காவின் அரசியல் மாற்றங்கள் தெற்காசிய பிராந்தியத்தின் நலன்களில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை தயாரித்து வழங்குமாறு இந்தியாவிடம் அமெரிக்கா கோரியுள்ளது. அண்மைக்காலமாக சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள சகலவிதமான மாற்றங்கள் குறித்தும் இந்த அறிக்கையில் இந்தியாவின் கருத்தை முன்வைக்குமாறு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிறிலங்காவில் போருக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், சிறிலங்காவுடனான வெளிவிவகார உறவு, சிறிலங்காவின் அரசமைப்பில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள், அந்த மாற்றங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் போன்ற சகல விடயங்கள் குறித்தும் இந்தியாவிடம் கருத்து கோரியுள்ளது அமெரிக்கா.

மூன்று நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா இந்த கோரிக்கையை இந்தியாவிடம் முன்வைத்ததாகவும் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கேற்ப இந்திய தரப்பினர் இந்த அறிக்கை தயாரிக்கும் பணியை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக அமெரிக்காவின் பல அதிகாரிகள் சிறிலங்காவுக்கு விஜயம் செய்து அரசு தரப்பு அதிகாரிகளுடன் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தடுத்துவைக்கப்பட்டுள்ள விடயம் உட்பட பல முக்கிய விவகாரங்கள் தொடர்பில் பேச்சுக்கள் நடத்தி சென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.