ஜேர்மனியில் ‘தமிழ் இளைஞர் சந்திப்பு 2010’

புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் இளைய தலைமுறையினர்க்கு இடையிலான சந்திப்பு ஒன்று ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை ஜேர்மனியின் டுசல்டோர்ஃப் [Düsseldorf] மாநகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

புலம்பெயர்ந்த நாடுகளில் செயற்திறனோடு இயங்கும் தமிழ் இளைய தலைமுறையினர் தமக்குள் அறிமுகமாகிக் கொள்ளும் நோக்கோடும் அவர்களுக்கிடையிலான ஆக்கபூர்வமான வலையமைப்பை உருவாக்கும் நோக்கோடும் ‘தமிழ் இளைஞர் சந்திப்பு 2010’ என்ற தலைப்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சமூகத்தின் இளைய தலைமுறையினரில், கல்வி பயிலும் மாணவர்கள், பல்துறைசார் இளைஞர்கள், தனித்தும், அமைப்பு ரீதியாகவும் இயங்கும் இளைஞர்கள், கலந்து கொண்டனர்.

யேர்மனியில் மருத்துவத் துறை மாணவியான ரூபாசினி பாலசுப்ரமணியம், மற்றும் யேர்மனியில் கணனி ஊடக வரைகலையாளரான [digital media artist] சஞ்சீவ்காந் ஆகியோரால் இச் சந்திப்பு ஒருங்கிணைக்கப்ட்டிருந்தது.

இதன்போது, இச் சந்திப்பின் நோக்கம் பற்றியும் அதன் தேவை பற்றியும் நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவரான சஞ்சீவ்காந்தால் விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்பொழுது, இது ஒரு முதல் முயற்சி என்றும் எந்தவித அமைப்பும் சாராமல் இளைஞர்களால் முன்னெடுக்கப்படுகிறது என்றும் ஒவ்வொரு ஆண்டும் இந்த இளைஞர் சந்திப்பை நடத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் சஞ்சீவ்காந் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து கருத்தாடல் இடம்பெற்றது. அதில் தாயக அரசியற் சூழல், மக்களின் அவலச் சூழல், புலம்பெயர் தமிழ் மக்களின் குழப்பநிலை போன்றவை தொடர்பாக கருத்துகள் பகிரப்பட்டன.

இக்கருத்தாடலில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் இளைஞர்கள் தமது கடமையுணர்ந்து செயற்படவேண்டியது, போன தலைமுறையினரின் தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளுதல், அரசியல் பண்பைப் பேணுதல், சக மனிதர்களின் கருத்தை மதித்தல், அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கப்பால் இளைஞர்களுக்குள் புரிந்துணர்வை வளர்த்தல், புலம்பெயர்ந்த நாடுகளில் எமது தனித்துவத்தையும், அடையாளங்களையும் இழந்துபோகாமல் இருத்தல் போன்ற விடயங்கள் பலராலும் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் புலம்பெயர்ந்த நாடுகளில் இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. முதலில் யேர்மனி, சுவிஸ், நோர்வே, போன்ற நாடுகளில் முன்னெடுக்கப்பட இருக்கிற ஈழத்தில் நிகழ்ந்த இனக்கருவறுப்பு தொடர்பான முத்திரை வெளியீடு பற்றி சட்டத்துறை மாணவியான அருள்நிதிலா தெய்வேந்திரம் அறிமுகம் செய்தார்.

அடுத்து சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் – மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக சுவிசில் அரசியல் துறை சார்ந்து இயங்கும் லதன் சுந்தரலிங்கம் உரையாற்றினார்.

மேலும், ஈழத்தமிழ் சினிமாவுக்காக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இணையத்தளம் பற்றி நோர்வேயில் இருந்து வருகை தந்த அனைத்துலக விருது வென்ற ‘வன்னி எலி’ என்கிற குறும்படத்தின் இயக்குனர் சுபாஸ் கமலேந்திரன் அறிமுகம் செய்தார்.

இதேவேளை, நிகழ்வின் முடிவில் ‘Little Terrorist’ என்கிற குறும்படம் திரையிடப்பட்டது. இது அஸ்வின் குமார் என்பவரால் உருவாக்கப்பட்ட குறும்படம். கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட பாக்கிஸ்தான் இந்திய எல்லையை தற்செயலாக கடக்கும் ஒரு முஸ்லிம் சிறுவனை மையப்படுத்திய குறும்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் இந்த இளைஞர் சந்திப்பின் ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவரான ரூபாசினி பாலசுப்பிரமணியம் தொகுப்புரை நிகழ்த்தினார். மிகவும் பயனுள்ளதாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு தளங்களில் இயங்கும் தமிழ் இளைய தலைமுறையினரை வேறுபாடுகளுக்கப்பால் சந்திக்க வைத்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

இந்த ‘தமிழ் இளையோர் சந்திப்பு 2010’ என்பது, “எதுவுமே முடிந்து போகவில்லை” என்பதை தெளிவாகச் சொல்லும் விதமாகவும் இளந்தமிழ்ச் சமூகத்துக்கு நம்பிக்கை தரும் விதமாகவும் அமைந்திருந்தது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.