மன்னார் பணியகத்தை மூடுகிறது அனைத்துலக செஞ்சிலுவைக் குழு

மன்னாரில் இயங்கும் தமது பணியகத்தை எதிர்வரும் நவம்பர் மாத இறுதியுடன் மூடப் போவதாக அனைத்துலக செஞ்சிலுவைக் குழு அறிவித்துள்ளது.

ஆயினும் மன்னாரில் மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் வவுனியாவில் உள்ள பணியகம் மூலம் உதவிகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஆயுத மோதல்கள் முடிவடைந்து ஒரு வருடத்துக்கு மேலாகியுள்ள நிலையில் பணிகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளின் ஒரு முயற்சியாக அனைத்துலக செஞ்சிலுகைக் குழு தனது மன்னார் மாவட்டத்துக்கான பணியகத்தை எதிர்வரும் நவம்பர் மாத இறுதியுடன் மூடிக் கொள்ளவுள்ளது.

ஆனாலும் இந்தப் பகுதியில் மீளக்குடியேறிய சமூகங்களுக்கான ஆதரவை அனைத்துலக செஞ்சிலுவைக் குழு வவுனியா பணியகம் ஊடாக வழங்கும். இந்தப் பணியகத்தின் ஊடாக மன்னாரை வதிவிடமாக் கொண்ட குடும்பங்கள் தடுப்புக்காவலில் உள்ளவர்களை பார்வையிடச் செல்வதற்கான உதவிகளையும் வழங்கும்.

இந்தத் திட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் உள்ள தமது உறவினரைப் பார்வையிடச் செல்வதற்கு உதவி கோரி நிற்கும் குடும்பங்களுக்கு அனைத்துலக செஞ்சிலுவைக் குழு பணக் கொடுப்பனவை வழங்கி வருகிறது“ என்று கூறப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.