சீன, இந்திய ஆதரவுடன் மேற்குலகை எதிர்க்க துணிந்த சிறிலங்கா – அனைத்துலக மனித உரிமை சாசனத்தையும் மதிக்க மறுப்பு

சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் நெருக்கமான நட்பினை வளர்த்துவரும் சிறிலங்கா இந்நாடுகளின் ஆதரவோடு மேற்குலக நாடுகளையும் அவற்றின் பரிந்துரைகளையும் எதிர்க்கும் வல்லமையை பெற்றிருக்கிறது.

இது சிறிலங்காவின் அனைத்துலக உறவிலும் உள்நாட்டு பொருளாதார மற்றும் மனித உரிமை நிலவரங்களில் பாரிய தாக்கங்களையும் உருவாக்கியுள்ளது.

சிறிலங்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிகளுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினை இடைநிறுத்துவது என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு ஈற்றில் நடைமுறைக்கும் வந்துவிட்டது.

வலுவான இந்தத் தடை ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற போதும் சிறிலங்கா தனது மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையினை ஏற்றுச் சிறிலங்கா சிறிதளவுக்குக்கூட வளைந்துகொடுக்கவில்லை.

மாறாக கடந்த ஆண்டு மே மாதம் முடிவுக்குவந்த 30 ஆண்டுகால போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்த முனைப்புக்கள் எதனையும் மேற்கொள்ளாது சிறிலங்கா தொடர்ந்தும் இறுமாப்புடன் அப்படியே இருக்கிறது.

மேற்கிலிருந்து எழும் இதுபோன்ற தடைகளை வெற்றிகரமாகத் தாண்டும் வகையில் அதிபர் ராஜபக்சவினது அரசாங்கம் வேகமாக வளர்ந்துவரும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் ஆதரவுடன் துணிந்து நிற்கிறது.

தொரடான எச்சரிக்கைகள், காலக்கெடுக்களின் பின்னர் கடந்த ஓகஸ்ட் 15ம் நாளன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவிற்கான ஜி.எஸ்.பி பிளஸ் என அறியப்பட்ட வரிச்சலுகை இடைநிறுத்தப்பட்டது.

ஆனால் அதே நாளன்று சிறிலங்காவின் தென்முனையில் சீனாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட அப்பாந்தோட்டைத் துறைமுகத்திற்குள் நீரை நிரப்பும் பணியினை அதிபர் ராஜபக்ச ஆரம்பித்துவைத்தார். 360 மில்லியன் டொலர் பெறுமதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தத் துறைமுக நிர்மாணப் பணிகளுக்கான 85 சதவீதமான நிதியினைச் சீனா வழங்கியிருக்கிறது.

சிறிலங்காவினது மனித உரிமை நிலைமைகள் மேம்பட வேண்டும் என ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அழைப்பு விடுத்துக்கொண்டிருந்த அதேவேளை தென்னாசியப் பிராந்தியத்தில் அமைந்திருக்கும் சிறிலங்காவிற்கு அதிக அனைத்துலக உதவிகள் தேவை என சீனா அழைப்புவிடுத்திருந்தது.

”உலகிலுள்ள அளவில் பெரிய மற்றும் சிறிய நாடுகளைப் பொறுத்தவரையில் அவை ஒவ்வொன்றும் தங்களது சொந்தப் பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றன. அந்தந்த நாடுகளில் நிலவுகின்ற நிலைமைக்கு ஏற்ப, வெளியார் எவரதும் அழுத்தமோ அல்லது தலையீடோ இன்றி இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்படவேண்டும்” என சீன வெளியுறவு அமைச்சர் யாங்கி ஜெச்சி கூறியிருக்கிறார்.

அண்மையில் சீனாவிற்கான உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொண்டிருந்த சிறிலங்காவினது வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிசுடனான சந்திப்பின் பின்னரே அவர் இந்தக் கருத்தினைக் கூறியிருக்கிறார்.

விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காவினது அரச படைகளுக்குமிடையில் வடக்கில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த மூர்க்கமான மோதல்களின் விளைவாக சிதைந்துபோன வடக்கினது தொடருந்துப் பாதைகளின் குறிப்பிட்ட பகுதியினை மீளமைப்பதற்காக 83 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியாவிடமிருந்து பெறுவதற்கான ஒரு உடன்பாட்டில் சிறிலங்கா அண்மையில் கையெழுத்திட்டிருந்தது.

இதே தொடருந்துப் பாதையின் பிற பகுதிகளை மீளவும் நிர்மாணிப்பதற்காக ஏற்கனவே 140 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உடன்பாடொன்று ஏலவே கைச்சாத்திடப்பட்டிருக்கிறது.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீளெழுச்சிக்காக இந்தியா வழங்கும் 800 மில்லியன் டொலர் பெறுமதியான உதவித்திட்டங்களின் ஒரு பகுதியாகவே தொடருந்துப் பாதைகளை மீள அமைப்பதற்கான இந்த நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

“நாட்டினது வட மாகாணத்தினை மீளக்கட்டியெழுப்புதல் என்ற மிகவும் முக்கியமான சவால்நிறைந்த பணியினை மேற்கொண்டுவரும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு தொடரான உதவிகளை வழங்குவதில் இந்தியா உறுதியுடன் இருக்கிறது” என அண்மையில் சிறிலங்காவிற்கு வந்திருந்த இந்திய உயர்மட்டக் குழுவினர் கூறியிருந்தார்கள்.

ஆயுதப் போராட்டத்தின் விளைவாக அழிந்துபோன வீடுகளை மீள நிர்மாணிக்கும் விடயத்திலும் இந்தியா தனது உதவிகளை வழங்கியிருக்கிறது. வடக்கில் போர் இடம்பெற்ற பகுதிகளில் 160,000 புதிய வீடுகளை நிர்மானிக்கவேண்டிய தேவை எழுந்திருப்பதாகவும் இவற்றில் 50,000 வீடுகளைத் தான் நிர்மாணிக்கப்போவதாகவும் இந்தியா உறுதியளித்திருப்பதாகவும் ஐ.நா கூறுகிறது.

சிறிலங்காவிலும் தங்களது செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியம் தொடர்பில் இந்திய நிறுவனங்களும் ஆராய்ந்துவருவதாகத் தெரிகிறது. சிறிலங்காவினது சந்தைகளுக்கென தங்களது நிறுவனம் புதிய வாகனங்களை வடிவமைத்து வருவதாகவும் தமது வாகனங்களைப் பொருத்தும் ஒரு தொழிற்சாலையினைக் கொழும்பில் நிறுவவுள்ளதாகவும் அண்மையில் இந்தியாவின் வாகன உற்பத்தி நிறுவனமான மகேந்திரா கூறியிருக்கிறது.

”சீனா உள்ளிட்ட நாடுகள் வழங்கிய தாராளமான ஆதரவின் விளைவாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மேற்குநாடுகளின் அழுத்தத்திலிருந்து சிறிலங்கா தன்னை விடுவித்துவிட்டது” என ஆய்வாளர் ஜெகான் பெரேரா கூறுகிறார்.

மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலக சாசனங்களை மதித்துச் செயற்படுவதற்குச் சிறிலங்கா தவறிவிட்டது என ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியிருந்தது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினைத் தொடர்ந்தும் பெறவேண்டுமெனில் சிறிலங்கா மனித உரிமை விடயங்கள் தொடர்பில் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்திருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவலின்படி, 2008 ம் ஆண்டு 100 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினைச் சிறிலங்கா பெற்றிருக்கிறது. இச்சலுகை நிறுத்தப்பட்டிருப்பதானது 270,000 பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் சிறிலங்காவினது ஆடை உற்பத்தித் தொழிற்துறைக்கு விழுந்த பேரிடியே.

வெளிநாட்டு நிதியினைச் சிறிலங்காவிற்கு அதிகளவில் பெற்றுத்தரும் தொழில்துறையாக ஆடை உற்பத்தியே விளங்குகிறது. 2009ம் ஆண்டு 3 பில்லியன் பெறுமதியான ஆடைகள் சிறிலங்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினை மீண்டும் பெறுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் சிறிலங்காவினை அவமதிக்கும் ஒன்றாக அமைகிறது என சிறிலங்கா அரசாங்கத்தின் பேச்சாளர் கெஹெல்லிய ரம்புக்வெல கூறியிருந்தார்.

இந்த ஆண்டினது முற்பகுதியில் மீண்டும் வரிச்சலுகையினைப் பெறுவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைகளை வெளியிட்ட உடன் பேச்சாளர் ரம்புக்வெல இந்தக் கருத்தினை முன்வைத்திருந்தார்.

போரின் இறுதிநாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சில இக்கட்டானதொரு அறிக்கையினை ஜி.எஸ்.பி வரிச்சலுகை இடைநிறுத்தம் நடைமுறைக்கு வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கா வெளியிட்டிருந்தது.

”போரின் இறுதி நாட்களில் சர்வதேசச் சட்டங்கள் மீறப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான முயற்சிகளாக சிறிலங்கா அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் இனநல்லிணக்க ஆணைக்குழுவினை ஏற்படுத்தியிருப்பதோடு ‘மிகச்சிறந்த நபர்களின் குழு’ என்ற ஒன்றையும் அமைதிருந்தது” என அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டிருந்தது.

ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அமைத்திருந்த ‘மிகச்சிறந்த நபர்களின் குழு’ வினைத்திறனற்றது என இராஜாங்கத் திணைக்களம் கூறுகிறது.

”கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது கடந்த மே 14ம் திகதி அமைக்கப்பட்டிருந்தாலும் அது தனக்கு வழங்கப்பட்ட பணியில் அரைப்பகுதியினைக் கூட இன்னமும் முடிக்கவில்லை. இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நியமித்த முறை மற்றும் இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் தகவல்கள் என்பன இது சுதந்திரமாகச் செயற்படுமா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியிருக்கிறது” என இராஜாங்கத் திணைக்களம் தனதறிக்கையில் தொடர்ந்து குறிப்பிட்டிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியமானது ஜி.எஸ்.பி வரிச்சலுகையினை இடைநிறுத்தியிருப்பதனால் எவரும் தங்களது வேலைவாய்ப்பினை இழந்துவிடமாட்டார்கள் என சிறிலங்கா அரசாங்கம் உறுதிபடக் கூறுகிறது.

“உண்மையினைக் கூறப்போனால் சிறிலங்காவினது அந்நியச் செலாவணி இந்த மாதத்தின் இறுதியில் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் எனச் சிறிலங்கா எதிர்பார்க்கிறது” என அரசாங்கத்தின் பேச்சாளர் கெஹெல்லிய ரம்புக்வெல கூறுகிறார்.

”உல்லாசப்பயணத்துறை மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்து கிடைக்கும் பணம் ஆகியவற்றின் காரணமாக சிறிலங்காவினது அன்னியச் செலாவணி பெரிதும் அதிகரிக்கும் என்றும் நாட்டினது பொருளாதாரத்தில் ஜி.எஸ்.பி வரிச்சலுகை இடைநிறுத்தப்பட்டது எந்தவிதமான தாக்கத்தினையும் ஏற்படுத்திவிடாது” என்றும் ரம்புக்வெல தொடர்ந்து கூறினார்.

ஆனால் சிறிலங்காவினது ஆடைக் கைத்தொழிலில் பணிபுரிபவர்கள் அரசாங்கத்தின் இதுபோன்ற உறுதிமொழிகளை நம்பவில்லை என கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயப் பகுதியில் இடம்பெற்ற பணியாளர்கள் உரிமைகளுக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆடை உற்பத்தித் தொழில்துறையினைச் சேர்ந்த பணியாளரான அசிலா மபலகம கூறுகிறார்.

”ஜி.எஸ்.பி வரிச்சலுகை பறிபோய்விட்டது. இந்த நிலையில் உண்மையில் என்ன நடக்கும் என எவருக்கும் சரியாகத் தெரியாது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் இதன் தாக்கத்தினை நாங்கள் உணரமுடியும். தற்போது தொடர்புடைய அனைவரது மனங்களிலும் அச்சம் தான் குடிகொண்டிருக்கிறது” என்றார் அவர்.

நன்றி: புதினப்பலகை

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.