கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் அல்ல என்கிறது அரசு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்லர். அவ்வாறான கூற்றை ஏற்றுக்கொள்ளமுடியாது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட முழு நாட்டையும் அரசாங்கம் சமமான வகையில் விரைவாக அபிவிருத்தி செய்து வருகின்றது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலியரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது. தேர்தல் முடிவுகள் அவ்வாற உணர்த்த வில்லை. ஆனால் அரசாங்கம் எந்தவொரு அரசியல் கட்சியையும் தனிமைப்படுத்தவில்லை. எந்த மக்கள் பகுதியினரையும் அரசாங்கம் தனிமைப்படுத்தவில்லை.

முழு நாட்டையும் துரித கதியில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாங்கள் செயற்பட்டு வருகின்றோம்.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கு உள்ளிட்ட முழுநாட்டையும் விரைவில் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். வடக்கு கிழக்கையும் விசேடமாக துரித கதியில் அபிவிருத்தி செய்து வருகின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஜனாதிபதி அவர்களை அழைத்து பல தடவைகள் பேச்சு நடத்தியுள்ளார். மேலும் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள வந்தால் ஏற்றுக் கொள்வோம்.

இதேவேளை பலமான எதிர்க்கட்சி ஒன்று தேவையா? இல்லையா? என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். மக்களின் தீர்மானத்திற்கே முக்கியத்தும் அளிக்கப்படுகின்றது என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.