பொதுமக்கள இழப்புக்களை தவிர்த்த காரணத்தினால் யுத்த வெற்றி தாமதமானது என்கிறார் சவேந்திர சில்வா

பொதுமக்கள் இழப்புக்களை தவிர்த்து யுத்தம் முன்னெடுக்கப்பட்ட காரணத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் கால தாமதம் ஏற்பட்டதாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
 
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளில்லா உளவு விமானங்கள் மற்றும் துல்லியமான உளவுத் தகவல்களின் அடிப்படையில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதனால் பொதுமக்கள் இழப்புக்களை தவிர்க்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இஸ்ரேலிலிருந்து தருவிக்கப்பட்ட ஆளில்லா உளவு விமானங்களின் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் இராணுவம் யுத்த முன்நகர்வுகளை தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தி வந்ததாகவும் படையினர் புலிகளின் பாதுகாப்பை தகர்த்தெறிந்து பொதுமக்களை மீட்டெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பொதுமக்கள் இழப்புக்களை தவிர்த்து யுத்தம் முன்னெடுக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தமக்கு கட்டளையிட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
 
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தப்பிச் செல்லும் பொதுமக்களை பாதுகாப்பதற்காக 40 இடங்களில் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு பாரிய இழப்புக்களை ஏற்படுத்த முயற்சித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
 
காயமடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் படையினர் அடைக்கலம் வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
காயமடைந்த சில விடுதலைப் புலி உறுப்பினர்கள் விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இராணுவப் படையினர் வேண்டுமென்றே பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக சில உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள் பிரச்சாரங்களை மேற்கொண்ட போதிலும் அதில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
புலிகளின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட அரசாங்க வைத்தியசாலை ஒன்றை படையினர் வசப்படுத்திய போது, இராணுவம் குண்டுத் தாக்குதல் நடத்தியதாக பிரச்சாரம் செய்யப்பட்டதாகவும் அந்தப் பிரச்சாரம் பொய்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.