18 ஆவது திருத்தம் நாட்டிற்கு சுபீட்சத்தை ஏற்படுத்துமாம்!

அரசியலமைப்புக்கான 18வது திருத்தம் நாட்டிற்கு சுபீட்சத்தையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்துமே தவிர அது ஒருபோதும் பாதிப்பாக அமையாது என்று பெருந்தோட்டத் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

அமைச்சரவைப் பேச்சாளரும், தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பில் தான் திருத்தம் செய்துள்ளோம். இத்திருத்தத்தைச் செய்வதற்காக புதிய அரசியல் யாப்பு எதுவும் கொண்டுவரப் படவில்லை. அதனால் தான் உச்ச நீதிமன்றம் இத்திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல என அறிவித்தது. அத்தோடு இத்திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு மூன்றிலிரண்டு விசேட பெரும்பான்மை இருந்தால் போதும். சர்வசன வாக்கெடுப்பு நடத்தத் தேவை இல்லை என்றும் குறிப்பிட்டது. இத்திருத்தம் 161 எம்.பிக்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் 17 அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அவற்றில் 15 அரசியல் கட்சிகள் இத்திருத்தத்திற்கு ஆதரவு நல்கின. . சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆதரவு நல்கினர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் அரசாங்கத்துடன் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸம் சேர்ந்து இத்திருத்தத்திற்கு முழுமையாக ஆதரவு நல்கியது. அதேநேரம் ஐ. தே. க. மற்றும் தமிழரசுக் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஆதரவு நல்கினர்.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி)யும், ஜனநாயக தேசிய கூட்டணி (டி. என். ஏ)யும் தான் இத்திருத்தத்திற்கு ஆதரவு நல்கவில்லை. அவர்கள் பாராளுமன்றத்தில் ஏழு ஆசனங்களை மாத்திரமே கொண்டுள்ளனர்.

இத்திருத்தம் அரசியலமைப்புக்கு உட்பட்டு ஜனநாயக முறைப்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1931ம் ஆண்டு முதல் எமது மக்கள் வாக்குரிமையை அனுபவித்து வருகின்றார்கள். அன்று முதல் அவர்கள் சுதந்திரமாக வாக்களிப்பில் பங்குபற்றி வருகின்றார்கள். அதனால் எப்படி வாக்களிக்க வேண்டுமென அவர்களுக்குப் புதிதாக கூற தேவை இல்லை.

இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஒருவரை மூன்றாம் முறையும் அப்பதவிக்குத் தெரிவு செய்வது குறித்து மக்கள் தான் தீர்மானிப்பர். அதனால் இத்திருத்த மூலம் சர்வாதிகார நிலமை ஏற்படும் என்பது அர்த்தமற்ற கூற்றாகும். நாட்டில் ஸ்தீரமான ஆட்சி ஏற்படுவதையும், பாரிய பொருளாதார அபிவிருத்தியை நாடு அடைவதையும் விரும்பாத ஒரு சிறு குழுவினரே இவ்வாறு விமர்சிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.