மீள்குடியமர்வு தொடர்பில் அரசிடம் கூட்டமைப்பு கோரிக்கை!

சாந்தபுரம் மற்றும் வடமராட்சி கிழக்குப் பகுதிகளுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைககள் குறித்து அரசிற்கும் ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏனைய மக்களும் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமசந்திரன் ஊடகச் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மிக நீண்ட காலமாக கிளிநொச்சியில் இடைத்தங்கல் முகாமிலும், சாந்தபுரம் பாடசாலையிலும் இருந்த சாந்தபுரம் மக்களை மீள குடியேற அனுமதித்தமைக்கும் கொடிகாமம் இராமாவில் இடைத்தங்கல் முகாமில் இருந்த வடமராட்சி கிழக்கு மக்கள் மீள குடியேற அனுமதிக்கப்பட்டமைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மேதகு ஜனாதிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.

கிளிநொச்சி திருமுறுகண்டி, பொன்நகர் மற்றும் விசுவமடுவில் குமாரசாமிபுரம், மயில்வானப்புரம், கொழுந்துப்புலவு போன்ற இடங்களிலும் மன்னாரின் சன்னார் முள்ளிக்குளம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களும் இன்னும் மீளக்குடியேற அனுமதிக்கப்படாமல் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கின்றனர்.

மழைக்காலம் வருவதற்கு முன்னர் இந்த இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களும் மீளக்குடியேற அனுமதிக்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேதகு ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றது.

சுரேஷ் பிறேமச்சந்திரன் பா.உ
பேச்சாளர்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.