ரணில் மிரண்டாரா இல்லை மிரட்டப்பட்டாரா – அரசியலமைப்பு திருத்தத்தை முழுப்பலத்துடன் எதிர்க்காது நழுவியது ஏன்?

18ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தினை முன்னெடுப்பதற்கு மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது எதிர்க்கட்சிதலைவர் ரணில் தன் முழுபலத்துடனும் அமைந்த ஒரு எதிர்ப்பினைக் காட்டாது நழுவிக்கொண்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க விடுமுறையினைக் கழிப்பதற்கான இந்தியாவிற்கு வரவில்லை. இந்த மாதம் சென்னைக்கு வந்திருந்த விக்கிரமசிங்க போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதிக்கு இந்தியா விவசாய உதவிகளை வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்ததோடு சிறிலங்காவினது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்குத் தொடர்புடைய ‘அனைத்துத் தரப்பினரது’ கருத்துக்களும் உள்வாங்கப்படும் என உறுதியளித்தார்.

18வது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தினை முன்னெடுப்பதற்கு மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான நிர்வாகம் முழு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் நிலையில் அதற்கெதிரான மக்கள் போராட்டங்களை நடாத்துவதற்கு ஏதுவாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் ஏன் சிறிலங்காவில் இருக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறையினையும் குறிப்பிட்ட ஒருவரிடம் மாத்திரம் அதிகாரங்கள் பொதிந்து கிடப்பதையும் கடுமையாக எதிர்த்துவந்த ஒருவர்.

இந்த நிலையில் இவரது அரசியல் எதிராளிகள் யாரோ அவர்கள் தொடர்ந்தும் ஆட்சிபீடம் ஏறுவதற்கு வழிசெய்யும் 18ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் முன்னெடுக்கப்படுவதைத் தடுப்பதற்கான தன்னால் முடிந்த முயற்சிகள் எதனையும் ரணில் விக்கரமசிங்க முன்னெடுக்காதது ஏன்?

18வது அரசியலமைப்புச் சீர்திருத்தமானது சனநாயகத்தைச் சாகடிக்கும் அதேநேரம் நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணைக்குழு உள்ளிட் அரச இயந்திரத்தினைச் சீர்குலைக்கும் என்ற உண்மைக்கு அப்பால் ராஜபக்சவினது அரசாங்கத்தின் இந்த மோசமான முயற்சிகளுக்கு எதிரான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி காத்திரமான முனைப்புக்கள் எதனையும் எடுப்பதாகத் தெரியவில்லை.

அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கு எதிராக இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளைத் தவிர ஆக்கபூர்வமான எந்த முனைப்புக்களும் மேற்கொள்ளப்பவில்லை. 18வது அரசியலமைப்புச் சீர்திருத்தம் மக்களை எந்தவகையில் பாதிக்கும் என்பதை மக்களுக்கு விளக்கும் செயற்பாடுகள் கூட முன்னெடுக்கப்படவில்லை.

கொழும்பில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது எதிர்க்கட்சியின் குறிப்பிட்ட சில ஆதரவாளர்களும் ஒழுங்கமைப்பாளர்களும் மாத்திரம்தான் கலந்துகொண்டார்களே தவிர, எதற்காக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம் என்ற முழு விழிப்புடன் இந்த நிகழ்வில் கலந்துகொள்வில்லை.

அரசியலமைப்பின் 18வது சீர்திருத்தத்தினை அரசாங்கம்வேகமாக முன்னெடுத்தமையினால் அதற்கெதிரான போராட்டங்களை ஒழுங்குசெய்வதற்காக கால அவகாசம் எதிர்க்கட்சியினருக்குக் கிடைக்கவில்லை எனக் கூறிவிடமுடியாது.

அத்துடன் 18ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுக்களின் விபரங்கள் மக்களுக்குக் கிடைப்பதற்கு வழிசெய்யப்படவில்லை.

அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் அதிபர் ராஜபக்சவுடன் ரணில் விக்கரமசிங்க பேச்சுக்களில் ஈடுபட்டபோதும் இதன்போது உரையாடப்பட்ட வியடங்கள் என்ன என்பது மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கான முக்கிய கருத்துக்களைத் தாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்தே பெற்றுக்கொண்டதாக ராஜபக்ச கூறுகிறார்.

தனிநபர் அரசியல்

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஏன் இதுதொடர்பான தனது கருத்துக்களை மறைக்கமுனைவதோடு சுயநலத்தின் அடிப்படையில் செயற்படுகிறார்?

18வது அரசியலமைப்புச் சீர்திருத்தம் தந்துவிடப்போவது என்ன என்பதை அம்பலப்படுத்தி அரசாங்கத்திற்கு அவமானத்தினை ஏற்படுத்தும் வகையிலான ஊடகப் பிரச்சாரங்களில் விக்கரமசிங்க ஈடுபடாதது ஏன்?

சிறிலங்காவினது தேசிய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகள் தொடர்பில் கவனத்தைச் செலுத்துவதை விடுத்து எதிர்க்கட்சியினர் தங்களது கட்சிசார் சொந்தரப் பிரச்சினைகளிலேயே தற்போது அதிகம் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.

நீண்டகாலமாகவே இதுபோன்ற அரசியலமைப்புச் சீர்திருத்த யோசனைகளுக்குத் தங்களது கடுமையான எதிர்பினை வெளியிட்டுவந்த சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கடைசி நேரத்தில் அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கு ஆதரவளிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது ஏன் என்பதை சிறிலங்கா முல்லீம் காங்கிரசினது தேசிய அமைப்பாளர் சபீக் ராஜ்பதீனினது விளக்கத்தையும் அவர் முன்வைத்த காரணங்களையும் அலசி ஆராய்ந்தால் உண்மையான பிரச்சினை என்ன என்பது தெளிவாகும்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெற்று அரசியலமைப்புச் சீர்திருத்தத்தினைக் கொண்டுவருவதற்குப் பிற கட்சிகளைச் சேர்ந்த எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உதவியிருக்கிறார்கள். “ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லையெனில் எங்களது கட்சி உடைந்திருக்கும். தனிநபர் அரசியலைவிட கட்சி அரசியல் என்பது முக்கியமானதொரு விடயம்” என தங்களது முடிவினை வெளியிட்டபோது முல்லீம்காங்கிரசினது தேசிய அமைப்பாளர் ராஜ்பதீன் கூறியிருந்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் வழங்கிய சலுகைகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் 9 பேர் அரசாங்கத்திற்குத் தங்களது ஆதவினை வழங்கியிருக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சி போன்ற அளவில் பெரிய கட்சிகளால் பெருந்தோல்விகளிலிருந்து மீண்டௌமுடியும்.

ஆனால் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் போன்ற அளவில் சிறிய கட்சிகள் இதுபோன்ற தோல்விகளைச் சந்திக்குமிடத்து அதிலிருந்து மீள்வது கடினம். ஆதலினால்தான் அவர்கள் மிகவும் அவதானத்துடன்கூடிய தீர்க்கமானதொரு முடிவினை எடுத்திருக்கிறார்கள். தங்களது கட்சியினைக் காப்பாற்றுவதற்காக தேசிய ரீதியிலான நலன்களை விட்டுக்கொடுத்திருக்கிறார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் வேறு வழியின்றி கசப்பான முடிவொன்றை எடுத்திருக்கிறது. அரசியலமைப்புச் சீர்திருத்தத்தினை எதிர்த்துக் கடுமையாக அறிக்கைகளை விடாது, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் விரும்பியவாறு வாக்களிக்க அனுமதிப்பதன் ஊடாக கட்சியிலிருந்து மேலுமதிக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குக் கட்சி தாவுவதைத் தவிர்க்கலாம் என்பதுதான் இவர்களின் எண்ணம்.

ஆனால் இந்த எண்ணத்தினை மக்கள் மத்தியில் கூறமுடியாதுதானே. ஆதலினால்தான் அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக விரிவாக மக்களுக்கு எதுவும் கூறுவதை இவர்கள் தவிர்த்திருக்கிறார்கள்.

இதுபோல தனிநபர் அரசியலில் ஈடுபட்டமைக்காக அரசியலமைப்புச் சீத்திருத்த வாக்கெடுப்பு இடம்பெற்றபோது இந்தியாவில் இருந்த விக்கிரமசிங்க ஒரு சில கண்ணீர் துளிகளைச் சந்தியிருக்கலாம். யாரறிவார்கள் இதனை.

நன்றி: புதினப்பலகை

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.