உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நாடுமுழுவதிலும், ஜனவரி அல்லது பெப்ரவரியில்!

எதிர்வரும் 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அல்லது பெப்ரவரி மாதத்தில் உள்ராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமையில் உள்ளுராட்சிமன்ற சட்டமூலத்தின் திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

விரைவில் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

கடந்த முறைகளை போலன்றி இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் பாரியளவில் முக்கியத்துவம் பெறுகின்றன. காரணம் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து பிரதேசங்களிலும் இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெறப் போகின்றது.

அதாவது மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும். அப்பிரதேச மக்களும் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து உள்ளுராட்சி மன்றங்களுக்கு அனுப்ப முடியும்.

உள்ளுராட்சி மன்றங்கள் இயங்குவதன் மூலம் அம் மக்கள் தமது பிரதேசங்களை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்து கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. எனவே இம் முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலானது வடக்கு மாகாண மக்களுக்கு வரலாற்று ரீதியான முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையப்போகின்றது என்றார்.

ரம்புக்வெல தெரிவிக்கையில்,

வடக்கில் மாகாண சபையை விரைவில் நிறுவ வேண்டும் என்றே அரசாங்கம் விரும்புகின்றது. அதாவது அரசியல் ரீதியில் வடக்கில் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்த வேண்டுமானால் அங்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும்.

ஆனால் வடக்கில் இடம்பெயர்ந்த நிலையில் வடக்கில் இன்னமும் சிறியஅளவிலான மக்கள் தொகையினர் உள்ளனர். அதாவது ஆரம்பத்தில் இருந்த மூன்று இலட்சம் இடம்பெயர்ந்த மக்களுடன் ஒப்பிடுகையில் தற்போது சுமார் 30ஆயிரம் மக்களே எஞ்சியுள்ளனர்.

எனவே அந்த மக்களையும் மீள்குடியேற்றிய பின்னரே வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும் என்று அரசாங்கம் கருதுகின்றது.

இதேவேளை அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தவேண்டிய தேவை காணப்படுகின்றது. எனவே அதன் பின்னரே வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்தி முடிக்கும் சாத்தியம் உள்ளது.

மேலும் கிழக்கு மாகாண சபை சிறந்த முறையில் இயங்கிவருகின்றது. அதாவது சில குறைபாடுகள் காணப்பட்டாலும் அங்கு மாகாணசபை இயங்குவது வரவேற்கத் தக்க விடயமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.