ஐக்கிய தேசியக் கட்சி உடைகிறது! – ரணிலின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஆட்டம் கண்டுள்ளது!!

சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேட்சையாக தனித்து இயங்க முடிவு செய்துள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி 14 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பலவீனடைவதோடு, தணில் விக்கிரமசிங்கவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் ஆட்டம் கண்டுள்ளதாக அவ் வட்டாரங்கள் கூறுகின்றன.

சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக தனித்து இயங்க முடிவு செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் சஜீத் பிரேமதாசாவும் உள்ளடங்குவதாக தெரிய வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டும் படி இந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கையெழுத்துடன் விடுத்த கோரிக்கையை அக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்ததை அடுத்தே இந் நிலை தோன்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அரசாங்கத்துடன் இணைந்து வருவது மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு உட்பட்ட பல விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்காகவே கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டும் படி தாம் கோரிக்கை விடுத்ததாக இக் குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், தாங்கள் ஒருபோதும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை எனவும், எதிர்க்கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் இக் குழு அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 45 ஆசனங்களைக் கொண்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதை அடுத்து, அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39ஆக குறைவடைந்தது.

இந் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக தனித்து இயங்க முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, சுயேட்சையாக தனித்து இயங்க முடிவு செய்துள்ள இக் குழுவே சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உருவாகும் நிலை தோன்றியுள்ளதால், ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் கூட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் அக் கட்சியின் மறுசீரமைப்புக் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனக் கூறப்படுகின்றது.

இந் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி 14 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மூன்றாவது பெரிய எதிர்க் கட்சியாக மாறும் நிலை தோன்றியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.