அவுஸ்திரேலியாவில் குற்றம் சுமத்தப்பட்ட இரு ஈழத்தமிழர்கள் விடுதலை!

கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இரு ஈழத்தமிழ் இளைஞர்கள் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததாக இவர்கள் உட்பட எட்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ் விசாரணைகளின் போது இவ்விரு ஈழத்தமிழ் இளைஞர்களுக்கும் எதிராக சாட்சியங்களை முன்வைக்க முடியவில்லை என அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனை அடுத்தே, ஜொனாதன் மகேந்திரன் மற்றும் ஜோய் நிசானாத் குணரட்ணம் ஆகிய இரு ஈழத்தமிழரும் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 
அதேவேளை, அரச தரப்பு சட்டத்தரணி சாட்சியமாக முன்வைத்துள்ள பதிவு செய்யப்பட்ட நேர்காணலை நிராகரிக்க வேண்டும் என இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட  கணேசலிங்கம் சுந்தரலிங்கம் என்பவரின் சார்பில் வாதாடிய சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந் நிலையில், அரச தரப்பு சட்டத்தரணி முன்வைத்துள்ள சாட்சியத்தை நீதிமன்றம் நிராகரித்தால் கணேசலிங்கம் சுந்தரலிங்கம் விடுவிக்கப்பட்டு மீதமுள்ள ஐந்து பேருக்கு எதிராகவே வழக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இக் குற்றச்சாட்டின் பேரில் ஆனந்தரஜீவன் தங்கராசா, கோகிலகுமார் சுப்பிரமணியம், பிரணவன் சிவசுப்பிரமணியம், ஞானராஜ் ஜேசுராஜ் மற்றும் அன்புராஜன் அன்ரன் ஆகியோரும் நீதிமன்ற விசாரணைகளை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.