அரசியல் சாசனத்திற்கு எதிராக சுவரொட்டிகளை அச்சிட்ட நபர் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

18 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக சுவரொட்டிகளை அச்சிட்டு வெளியிட்ட நபர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
 
அரசியல் சாசனத்திற்கு எதிராக சுவரொட்டிகளை அச்சிட்டு பிரசூரம் செய்த நபரை காவல்துறையினர் தடுத்து வைத்திருப்பதாகத் தெரிவித்து அவரது சட்டத்தரணி இந்த மனுவை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

மிரிஹான காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜயம்பத்தி புலத்சிங்கள என்ற நபரின் சார்பில் சட்டத்தரணி லிலாந்தி டி சில்வா குறித்த மனுவை தாக்கல் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவினால் வழங்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
மிரிஹான காவல் நிலையத்தின் உதவி காவல்துறை அத்தியட்சகர், காவல்துறை மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய குறித்த சுவரொட்டிகள் அச்சிட்டு வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த அச்சகத்தின் உரிமையாளர் அவரது மனைவி மற்றும் மனைவின் சகோதரர்கள் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
விசாரணைகளின் பின்னர் அச்ச உரிமையாளரின் மனைவி மற்றும் சகோதரர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
எனினும், குறித்த அச்சகக உரிமையாளர் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை.
 
மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவதற்காக உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
18 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு தெரிவிக்கும் நபர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாகவும், இது ஓர் ஜனநாயக விரோத செயல் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தமக்கு விரும்பிய அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.