இந்திய மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படை தாக்குதல் – எட்டுப்பேர் காயம்

கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக பி.ரி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஒரு மீனவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

30 படகுகளில் சென்ற 120 இந்திய மீனவர்களை சுற்றிவளைத்து சிறிலங்கா கடற்படையினர் தாக்கியுள்ளனர்.

இந்திய மீனவர்களை தமது படகுகளில் ஏற்றியே தாக்குதல் நடத்தியதாகவும் அவர்களிடம் இருந்து இறால், மற்றும் வலைகளை பறித்துக் கொண்டு துரத்தி விட்டதாகவும் பிரிஐ தெரிவித்துள்ளது.

அதேவேளை இந்திய மீனவர்கள் தாக்கப்பட்ட செய்தியை சிறிலங்கா கடற்படை மறுத்துள்ளது.

அப்படியான எந்தச் சம்பவமும் நடக்கவில்லை என்றும் இது சிறிலங்கா கடற்படைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்றும் கடற்படைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.