ஈழ போராட்ட லட்சியம் என்றும் தோற்காது: வைகோ

கோவை சிங்காநல்லூரில் மதிமுக கட்சி நிர்வாகி இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்தச் சுயமரியாதை திருமணத்துக்கு தலைமை வகித்து, பேசிய வைகோ,

கோவையில் மதிமுகவின் தொழிற்சங்கப் பிரிவுக்குச் சொந்தமான கட்டடத்தை அத்துமீறி திமுகவினர் ஆக்கிரமித்தனர். அந்தக் கட்டடத்தைக் கைப்பற்றுவதற்காக போலி ஆவணங்களையும் சிலர் தயாரித்துள்ளனர்.

அந்தக் கட்டடத்தை மீட்கும் பொருட்டு, நீதிமன்றத்தை நாடி சட்டப் போராட்டத்தை மதிமுக நடத்தி வருகிறது. அறவழியிலான இந்தப் போராட்டத்தில் முதல்கட்ட வெற்றி பெற்றுள்ளோம். இந்தப் பிரச்னையில் முழு வெற்றியை பெறும் வரை தீவிரமாகப் போராடுவோம்.

வரலாறு காணாத துயரமும், துன்பமும் ஈழத்தில் அரங்கேறியுள்ளது. தமிழர்களது விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை வகித்த பிரபாகரன் உருவப் படத்தை எங்கும் வைக்கக் கூடாது என தமிழக அரசு கூறுகிறது. அதே சமயத்தில் ஈழத்தில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க காரணமான போருக்கு தலைமை வகித்த ராஜபட்சே இந்தியாவிற்கு வந்தால் ராஜமரியாதை வழங்கப்படுகிறது.

ஈழ போராட்ட வரலாற்றில் சிறிய பின்னடைவு ஏற்பட்டாலும், எத்தகைய சூழலிலும் ஈழ போராட்ட லட்சியம் மட்டும் தோற்காது. அண்ணா திராவிட நாடு கோரி கடுமையாக போராடிய கால கட்டத்தில் அவருக்கு எதிராக பல போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டனர். முதல்வரான பின்னர் தனக்கு எதிராக செயல்பட அதிகாரிகளை அண்ணா பழிவாங்கவில்லை. அதற்கு பதிலாக அவர்களுக்கு பதவி உயர்வை வழங்கினார்.

தன்னலமற்ற அந்தத் தலைவருக்கு பிறகு வந்த தலைமை சுயநல நோக்குடன் மட்டுமே செயல்படுகிறது என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.