உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் தனிநபர் அரசியலுக்காக செயல்படுகிறதா?

உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மகாநாடு ஒன்றை நடாத்திக் கொண்டிருப்பதையிட்டு பிரிட்டனில் வசிக்கும் முல்லைத்தீவு மக்கள் சார்பாக எனது உளங்கனிந்த வாழ்த்துக்களை தெருவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்த மாநாட்டை ஒழுங்கு செய்து திறம்பட நடாத்திக்கொண்டிருக்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய கிளையின் இந்த முயற்சிக்கு தமிழ் மக்கள் என்றும் கடமைப்பட்டுள்ளார்கள்.

தமிழ்மொழி, தமிழ் பண்பாடு, தமிழினம் அழிந்து விடுமோ என்ற ஏக்கத்தில் இருக்கும் புலம்பெயர் தமிழ் சமுகத்தின் மத்தியில் இப்படியான ஒரு மாநாடு நடைபெறுவதையிட்டு தமிழ் மக்கள் பெருமைப்படவேண்டும்.
 
இந்த மகாநாட்டில் தமிழ்மொழி தமிழினம் தமிழ்ப்பண்பாடு தொடர்பான ஆவணக் கண்காட்சியும் அகத்திலும் புலத்திலும் தமிழர் வாழ்வியல் வரலாறு மொழி இலக்கியம் சார்ந்த நூல்கள் இறுவட்டுக்கள் ஒளியிழை நாடாக்கள் நிழற் படங்கள் முதலியன கண்காட்சிக்கு வைக்கப்படும். கருத்தரங்கு கவியரங்கு, வில்லிசை, நடனம் நூற்கண்காட்சி, மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது என்பது இருட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது.
 
ஆனாலும் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியமும் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கமும் இணைந்து கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதியத்திற்கு புலம்பெயர் உறவுகள், பொது அமைப்புக்கள், வர்த்தகர்கள், கொடையாளர்கள், தர்ம நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமுமிருந்தும் தாரள நிதிப்பங்களிப்பினை உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் வேண்டிநிற்கின்றது என்ற செய்தி உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் குறுகிய கால, தனிநபர் சார்ந்த அரசியலுக்கு துணை போவதை தெட்டத் தெளிவாக தெரிவதை இட்டு புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது. பாதிக்கப் பட்ட கிளிநொச்சி மாணவர்கள் நன்மை பெறுவதை இட்டு எனக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அது புலம்பெயர் மக்களால் செய்யவேண்டிய கடமையும் கூட.  ஆனாலும் நான் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றிய அமைப்பாளர்கள் எனது பின்வரும் சந்தேகங்களுக்கு விடை தருவார்களா?
 
1 . உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் என்பது உலகத் தமிழர்களின் பொதுவான அமைப்பாகும். ஆனால் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கத்துடன் சேர்ந்தது கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதியை கோருவதன் காரணம் என்ன? ஒரு ஒட்டு மொத்த தமிழினத்தை பிரதிபலிக்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கான கல்வி மேம்பாட்டிற்காக நிதியை கேட்பது எந்த விதத்தில் நியாயமாகும்?
 
2. கிளிநொச்சி, வவுனியா வடக்கு, நெடுங்கேணி, முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு, மற்றும் மன்னாரின் சில பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்ணுக்கு கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை தெரிந்ததன் காரணம் என்ன?
 
உங்களுக்கு தமிழ் மகன் என்ற ரீதியில் ஒன்றை கூற விரும்புகிறேன். குறுங்கால, தனிநபர் அரசியல் சுயபோக நடவடிக்கைகளுக்காக நீங்கள் தொடர்ந்தும் துணைபோவீர்களானால் காலம் உங்களை மக்கள் கண்களிலிருந்து மறைத்துவிடும்.

இது நெருடலுக்கு ஒரு தனி நபரால் எழுதி அனுப்பப்பட்டது. இதில் உள்ள கருத்துகளுக்கு நெருடல் எந்த விதத்திலும் பொறுப்பேர்க்காது. இந்தக் கருத்துக்கள் ஒரு தனி நபர் கருத்தென்றாலும்; இந்தக் கருத்துக்கள் நியாயமானதாக இருப்பதால் நெருடல் ஆசிரியர் பீடம் இதை பிரசிரித்துள்ளது.

நன்றி

 
நன்றி.  க.செந்தில்குமரன் லண்டன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.