கட்சிமாறிய பொடியப்பு பியசேனாவுக்கு பத்துக் கோடி விலை பேசப்பட்டது. அதை வாங்கிக் கொண்டுதான் ஆளும்கட்சிக்குத் தாவினார்

தமிழ் சிஎன்என் இணையதளம் கட்சி தாவிய பொடியப்பு பியசேனாவை நேர்காணல் கண்டு “கூட்டமைப்பின் கூத்துக்களை அம்பலப் படுத்துகிறார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் சொன்ன எல்லாவற்றையும் வேத வாக்காக மதித்து இந்தச் செய்தி வெளியிட்டதன் நோக்கம் என்ன? இல்லை உள்நோக்கம் என்ன? 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு துரோகம் இழைத்துவிட்டு ஆளும் கட்சியிடம் சரண் அடைந்த பொடியப்பு பியசேனாவை ஓரு அரசியல் தொழுநோயாளியாகப் (Political leper) பார்க்காமல் அவரைப் பெரிய கதாநாயகனாகத் தமிழ்மக்களுக்கு சித்தரிப்பது ஏன்?
 
பொடியப்பு பியசேனா   “அரசின் அனைத்து அமைச்சர்களையும் சந்தித்து எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்றமையில் தொடர்ந்தும் பாடுபடுவேன்” என்பது கடைந்தெடுத்த பொய் அல்லவா?  அரை அமைச்சராக இருக்கும் கருணாவால் முடியாததை, முழு அமைச்சராக இருக்கும் டக்லஸ் தேவானந்தாவால் முடியாததை பொடியப்பு பியசேனா சாதித்து விடுவாரா? கேள்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவனுக்கு, குறிப்பாக (தமிழ்சிஎன்என் க்கு  மதியில்லையா?  இல்லை என்றால் தமிழ் சிஎன்என் அரச கைக்கூலிகளால் நடத்தப்படும் இணையதளமா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் “கூத்துக்களை”  அம்பலப்படுத்துகிறார் என்று பழித்துக் கூறம்போது அந்த முடிவுக்குத்தான் நாம் வரவேண்டியிருக்கிறது. இந்த இணைய தளம் ஆளும் சிங்கள பேரினவாத அரசின் ஊது குழல் என்பது சரியென்றால் தமிழ் உணர்வாளர்கள் இந்த இணைய தளத்தைப் புறந்தள்ள வேண்டும்!
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளராக நிற்பதற்கு விண்ணப்பம் செய்த பொழுது அந்தக் கட்சி ” தமிழீழ விடுதலைப் புலிகளையும் பிழையாக வழி நடத்தியவர்களும், புலிகளின் அழிவுக்கு காரணமானவர்களும் இக்கூட்டமைப்பினரே” என்பது பொடியப்பு பியசேனாவுக்குத் தெரிந்திருக்கவில்லையா? இந்த ஞானம் 18 ஆவது சட்ட திருத்தம் நாடாளுமன்றத்துக்கு வாக்கெடுப்புக்கு வந்தபோதுதான் வரவேண்டுமா? பொடியப்பு பியசேனா எந்தப் போதி மரத்தின் கீழ் இருந்த போது இந்த ஞானம் வந்தது?

”தந்தை செல்வா செய்த மிகப் பெரிய பிழை தமிழ் தேசிய கூட்டமைப்பை ஸ்தாபித்தமைதான். ஏனெனில் அக்கட்சி சரியான தலைமைகளிடம் பின்னர் கையளிக்கப்படவில்லை”  என்பதில் இருந்து பொடியப்பு பியசேனா ஒரு அரசியல் ஞான சூனியம் என்பது தெரிகிறது. அவருக்கு வரலாறே தெரியாது என்பது வெளிச்சமாகி இருக்கிறது. தந்தை செல்வநாயகம்  1977 இல் மறைந்து விட்டார். அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணிதான் இருந்தது. “அக்கட்சி சரியான தலைமைகளிடம் பின்னர் கையளிக்கப்படவில்லை” என்பது சரியானால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்னும் சொல்லப் போனால் தந்தை செல்வநாயகம் நிறுவிய தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் அம்பாரைத் தொகுதியில் போட்டியிட்டது ஏன்? ததேகூ காக்காய் பிடித்து கும்பிட்டு மண்டாடி நியமனம் கேட்பது பின்னர் வென்று பணத்துக்கு ஆசைப்பட்டு தன்மானம், மரியாதை எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு விட்டு ததேகூ க்கு சரியான தலைமை இல்லை என்பது வடிகட்டின சந்தர்ப்பவாத அரசியல் இல்லையா?

  1. காலம் காலமாக ததேகூ மக்களை ஏமாற்றி வருகிறது
  2. மக்களை சரியாக வழிநடாத்திச் செல்கின்றமைக்கான தலைமை கூட்டமைப்பில் இல்லை
  3. உலகின் மிகப் பெரிய பயங்கரவாதக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான்
  4. தமிழினத்தைப் புதை குழியில் தள்ளிய – தள்ளிக் கொண்டிருக்கின்ற கட்சி இதுதான்

இது போன்ற வசைகள் புலம்பல் எல்லாம் பொடியப்பு பியசேனா தனது துரோகத்தை மறைக்க எடுக்கும் எத்தனிப்பு ஆகும். இது  அரசியலில் அ, ஆ தெரிந்த எல்லோருக்கும் தெரிந்த வரலாறுதான். . கட்சி தாவும்  போது எல்லாத் துரோகிகளும் இப்படியான நொண்டிச் சாட்டுகளைத்தான் கையில் எடுக்கிறார்கள்.

பொடியப்பு பியசேனா தனது வடிகட்டிய துரோகத்தை மறைக்க புலி வேடம் போடுகிறார்.

“கூட்டமைப்பில் முக்கிய ஒரு பொறுப்பில் நான் இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலம் இடம்பெற முன்னரேயே ஜனாதிபதியின் காலில் விழுந்தாவது வன்னி மக்களையும், வே. பிரபாகரனையும், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களையும் காப்பாற்றியிருப்பேன்” என உளறும் பொடியப்பு பியசேனாவிடம் ஒரு கேள்வி. முள்ளிவாய்க்கால்  அவலம் முடிந்த கதை. இப்போது நீர் ஆளும் கட்சியின் செல்லப்பிள்ளை. இன்னும் முள்ளுவேலி முகாம்களிலும் இடைத்தங்கல் முகாம்களிலும் மூன்று இலட்சம் மக்கள் ஒரு வாய் சோற்றுக்கும்,  குடிக்கத் தண்ணீருக்கும்,  குந்தியிருக்க ஒரு ஓலைக் குடிசைக்கும்,  பிழைக்க வேலைக்கும், நோய்க்கு மருந்துக்கும் வழிசெய்ய முடியுமா?  கிழக்கு மாகாணத்தில் வாழ்வாதாரம் இழந்த 89,000 போர் கைம்பெண்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு அரசிடம் சொல்லி மறுவாழ்வு பெற்றுத் தர முடியுமா?

போர் முடிந்த பின்னரும் கிழக்கு மாகாணத்தில் 95 பேர் காணாமல் போயுள்ளார்கள். இதற்கு யார் பொறப்பு? இதற்கும் ததேகூ பொறுப்பா? இல்லை, இப்போது பொடியப்பு பியசேனா சரண் அடைந்திருக்கும் சனாதிபதி பொறுப்பா?

“இவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் வந்து பார்த்தமையே இல்லை. முதிர்கன்னிகள் மலிந்து போய் விட்டார்கள். வேலை வாய்ப்புக்கள் எதுவும் இங்கு இல்லை” என்கிறார் பொடியப்பு பியசேனா. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் அம்பாரைக்கு வரவேண்டும்? இவற்றுக்கு ஓரளவேனும் தீர்வு காணத்தானே அம்பாரை தமிழ் வாக்காளர்கள் பொடியப்பு பியசேனாவுக்கு வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பினார்கள்?  இது ஆடத்தெரியாத நர்த்தகி கூடம் கோணல் என்ற கதையாக இல்லையா?

“சில வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் மத மாற்றம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. தட்டிக் கேட்க யாருமில்லை. ஆனால் கூட்டமைப்பினரோ அறிக்கைகளை மாத்திரம் விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்” என்பது பொடியப்பு பியசேனா முன்வைக்கும்  இன்னொரு குற்றச்சாட்டு. சரி. இந்த மதமாற்றத்துக்கு எதிராக திருக்கோயில் மக்களை ஒன்று கூட்டி ஒரு அறப்போராட்டம் நடத்தியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? அதை ததேகூ தடுத்ததா?  பொடியப்பு பியசேனா சரண் அடைந்திருக்கும் மகிந்த இராசபக்சேயின் ஆட்சி வடக்கில் பவுத்த விகாரைகளைக்  கட்டுகின்றன. பவுத்த சிலைகள் சந்திக்குச் சந்தி நிறுவப்படுகின்றன.  மொத்தத்தில் வடக்கு துரித கெதியில் பவுத்த மயமாக்கப்படுகிறது. இதற்கு என்ன சொல்கிறார்  பொடியப்பு பியசேனா?

“வெளிநாடுகளில் விழாக்களில் கலந்து கொள்கின்றார்கள். கட்சியின் பெயர்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. ஆனால் அவர்கள் கூடிப் பேசும் போது ஆங்கிலத்தில்தான் கதைப்பார்கள். கூட்டமைப்பில் அறிஞர்கள், புத்திஜீவிகள் என்று யாராவது இருக்கின்றார்களா?.சம்பந்தன் ஆயினும் சரி, மாவை சேனாதிராசா ஆயினும் சரி, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆயினும் சரி, ஏன் கூட்டமைப்பின் எந்த நாடாளுமன்ற உறுப்பினராயினும் சரி வேறு ஒரு கட்சியில் வெற்றி பெறட்டும் பார்க்கலாம்” என தன்மானத்தையும்  இனமானத்தையும் பத்துக் கோடிக்கு  விலை பேசி விற்றுவிட்ட பொடியப்பு பியசேனா அறைகூவல் விடுகிறார்.  இது  பொடியப்பு பியசேனா முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

ததேகூ உதவாத கட்சி, தலைமை சரியில்லை என்றெல்லாம் திட்டிவிட்டு முடிவில் “கூட்டமைப்பின் எந்த நாடாளுமன்ற உறுப்பினராயினும் சரி வேறு ஒரு கட்சியில் வெற்றி பெறட்டும் பார்க்கலாம்” என தோள்தட்டுகிறார். இதில் இருந்து என்ன தெரிகிறது? ததேகூ ஒரு வலுவான கட்சி. தமிழ்மக்களின் அரசியல் வேட்கைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சி. அந்தக் கட்சியில் பொடியப்பு பியசேனா போட்டி போட்டதன் காரணமாகவே வெற்றி பெற்றார் என்பதுதான்! அடுத்த முறை ஆளும் கட்சியில் பொடியப்பு பியசேனா தேர்தலில் நின்று பார்க்கட்டும். கட்டுக் காசு கிடைக்கிறதா என்று பார்ப்போம்!

பொடியப்பு பியசேனாவின் இன்னொரு குற்றச்சாட்டு “சிந்தித்து வாக்களிக்க கூடிய வாக்காளர்கள் இல்லாமையால் தொடர்ந்தும் பாமர மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். கொழும்பிலிருந்து வெளியாகும் சில பத்திரிகைகள்தான் இவர்களை பெரியவர்கள் ஆக்குகின்றன” என்பதாகும். பாமர மக்கள் சிந்தித்து வாக்களித்த படியால்தான் ததேகூ வேட்பாளாரக அம்பாரையில் போட்டியிட்ட பொடியப்பு பியசேனா வெற்றி பெற்றார்.

அவர்கள் சிந்திக்காது  வாக்களித்திருந்தால் ஆளும்கட்சியில் போட்டியிட்ட இன்னொரு துரோகி இனியபாரதி வென்றிருப்பார்!  பொடியப்பு பியசேனா மண் கவ்வியிருப்பார்.

ஒரு கட்சியில் போட்டியிட்டு வென்ற பின்னர் கட்சி தாவும் துரோகிகள் அடுக்கிக் காட்டும் சப்பைக் கட்டுக்களைத்தான் பொடியப்பு பியசேனா தனது துரோகத்தை மறைக்க அடுக்கிக் காட்டுகிறார்.  இதற்கெல்லாம் பதில் சொல்வது ஒரு விதத்தில் நேர விரையமாகும். தன்மானத்தையும் இனமானத்தையும் விற்று விடுவது  என்று முடிவெடுத்து விட்டால் நொண்டிச் சாக்குகளும், சப்பைக் கட்டுகளும் வண்டி வண்டியாய் வரத்தான் செய்யும்!

இப்போது பொடியப்பு பியசேனா தமிழ் சிஎன்என் க்கு சொல்லாததை சொல்லாம் என நினைக்கிறேன்

18 ஆவது சட்ட திருத்தத்தை எதிர்த்து வாக்களிப்பது தொடர்பாக  ததேகூ மூன்றுமுறை கூடி முடிவு எடுத்த போது பொடியப்பு பியசேனா ஆதரித்தே வாக்களி்தார்.

வாக்கெடுப்புக்கு முதல்நாள் பொடியப்பு பியசேனா  ஆளும் கட்சிக்குத் தாவப் போகிறார் என்ற செய்தி கசிந்த போது ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்தி்ரன் பொடியப்பு பியசேனாவைக் கூப்பிட்டுப் பேசினார். அப்போது பொடியப்பு பியசேனா எல்லா இந்துக் கடவுளர்களது பெயர்களைக் கூறி தான் கட்சி தாவப் போவதில்லை என்று சத்தியம் செய்தார். நாடாளுமன்றத்தில் தான் என்ன பேச வேண்டும் என்பதை எழுதித் தருமாறும் கேட்டுப் பெற்றுக் கொண்டார். அடுத்த நாள் நாடாளுமன்றத்தில் பேச எழுந்த போது சுமந்திரன் எழுதிக் கொடுத்த பேச்சில் காணப்பட்ட “மதிப்புக்குரிய சபாநாயகர் அவர்களே….” என்பதை மட்டும்  படித்து விட்டு பின்னர் ஆளும் கட்சி எழுதிக் கொடுத்த அறிக்கையை படித்து முடித்தார். இதுதான் நாடாளுமன்றத்தி்ல்  நடந்தது.

கட்சிமாறிய பொடியப்பு பியசேனாவுக்கு பத்துக் கோடி விலை பேசப்பட்டது. அதை வாங்கிக் கொண்டுதான் பொடியப்பு பியசேனா  ஆளும்கட்சிக்குத் தாவினார். இதுதான் உண்மை. இதுதான் நடந்தது. இப்போது அவர் கண்டு பிடித்து சொல்லும் சொத்தை காரணங்கள் தனது துரோகத்தை மறைக்க அல்லது நியாயப்படுத்த சொல்லப்படுவை ஆகும்.

அம்பாறை தேர்தல் மாவட்ட தமிழ்மக்கள் பொடியப்பு பியசேனாவை ஒரு அரசியல் தொழுநோயாளியாகக் கணித்து அவரை ஒதுக்க வேண்டும். ஏற்கனவே அவரது வீட்டுக்கு நூற்றுக் கணக்கான காவல்துறையினர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

ததேகூ பொடியப்பு பியசேனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறது. எதிர் காலத்தில் வேட்பாளர் தெரிவில் பொடியப்பு பியசேனா போன்ற துரோகிகளுக்கும் கூத்தாடிகளக்கும்  நியமனம் வழங்கப்படுவது  முற்றாகத் தவிர்க்க வேண்டும். கட்சிதாவிகள் செல்லையா இராசதுரை, சிஎக்ஸ் மாட்டின் போன்றவர்களுக்க்குப் பின்னர் நாம் பாடம் படித்திருக்க வேண்டும். எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது வில்லங்கந்தான். இருந்தும்   கட்சியில் அய்ந்து அல்லது பத்து ஆண்டு காலம் உறுப்புரிமை வகித்தவர்களுக்கும் கொள்கையில் உறுதியும் நாணயமும் வாய்மையும் நேர்மையும் தூய்மையும் உடையவர்களுக்குகே நியமனம் வழங்க வேண்டும்.

– நக்கீரன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.