சிறிலங்கா நாடாளுமன்றில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அதிகரிப்பு – புதியதொரு நெருக்கடியில் மகிந்த

அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் பின்னர் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அரசியல் ரீதியாக புதியதொரு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.

நவம்பர் மாதத்திலிருந்து மகிந்தவின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமாகிறது. தனது முதலாவது பதவிக்காலம் முடிவதற்கு முன் இந்த சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற வேகத்தில் அதனை அவர் முடித்திருக்கிறார்.

தான் அதிபர் பதவியில் இரண்டு தடவைகளுக்கு மேல் நீடிப்பதுடன் நாட்டின் சகல அதிகாரங்களையும் தனக்குக்கீழ் வைத்துக்கொண்டு சகலவிதமான ஆபத்துக்களையும் சட்டச்சிக்கல்களையும் முறியடித்து ஒரு சர்வாதிகாரி போல் ஆட்சியை நடாத்துவதே அவரது நோக்கம்.

தனது முதலாவது பதவிக்காலம் முடியும் முன்னர் அதிபர் தேர்தலை நடத்தி தனது இரண்டாவது பதவிக்காலத்துக்கான வெற்றியை தேடிக்கொண்டார் மகிந்த.

தான் மூன்றாவது தடவையும் அதிபராக இருப்பார் என்ற நோக்கத்திலேயே அரசியல் சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த, அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை வெற்றிகரமாக நாடாளுமன்றத்தில் நிறை வேற்றுவதற்காக அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலம் தேவைப்பட்டது.

இதற்காக, அரசியல் கட்சிகளை மிரட்டியும் உறுப்பினர்களுக்கு பதவி ஆசை காட்டியும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை தனது பக்கம் இழுத்திருந்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிரட்டிப் பணியவைக்கப்பட்டது, பிரபா கணேசன் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உள்ளிடோர் பதவி ஆசை காட்டி உள்வாங்கப்பட்டனர்.

இதனை அவர்களின் வாய்மூலமே அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு திரட்டப்பட்ட சக்தி மறுதலித்து மீண்டும் அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசியலுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

மகிந்தவின் பெரும்பான்மைப் பலம் திரட்டும் முயற்சியால் தற்போது நாடாளுமன்றில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் தொகை அதிகரித்துள்ளது. கட்சி தாவிய அனைவருக்கும் அல்லது பெரும்பாலானோருக்கு அமைச்சுப்பதவிகளை கொடுப்பது என்றால் சிறிலங்காவில் தற்போதுள்ள அமைச்சு பொறுப்புகள் அல்லது அமைச்சுக்கான துறைகள் போதாது.

மாறாக ஏற்கனவே அமைச்சு பொறுப்புகளில் இருக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மூத்த அல்லது ஏற்கனவே கட்சிக்காக பாடுபட்ட உறுப்பினர்களை பொறுப்புகளிலிருந்து நீக்கிவிட்டு அந்த அமைச்சுகளை புதிதாக வந்தவர்களுக்கு கொடுத்தால் ஆளும் கட்சிக்குள் ஏற்கனவே மகிந்தவுக்கு எதிராக விசனப்பட்டுக்கொண்டிருக்கும் உறுப்பினர்கள் கட்சியை உடைக்கவோ அல்லது அதிபருக்கு நெருக்கடியை உருவாக்கவோ சாத்தியப்பாடு உள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே பொறுப்புகளில் உள்ள அமைச்சர்களை சாந்தப்படுத்தி விலகவைக்க அல்லது புதிதாக வந்தவர்களை சாந்தப்படுத்தும் முயற்சி செய்து வரும் மகிந்த மறுபுறத்தில் அமைச்சுகள் மீது குற்றம் கண்டுபிடித்து அமைச்சர்களை மாற்றுவதற்கான அல்லது நீக்குவதற்கான முயற்சிகளை மகிந்த மேற்கொண்டுவருகிறார்.

இதற்காக சிறிலங்காவின் அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக அதிபர் மகிந்த ராஜபக்ச இரகசியக்குழு ஒன்றை நியமித்துள்ளார்.

இந்தக்குழு இரகசியமான முறையில் செயற்படும் என்றும் கடந்த சில மாதங்களில் அமைச்சுக்களின் செயற்பாடுகளில் உள்ள குறை நிறைகளை ஆராய்ந்து அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமைச்சரவைக்கூடத்தில் இந்த இரகசியக் குழுவின் அறிக்கை தொடர்பாக அதிபர் ராஜபக்ச கவனம் செலுத்துவார் என்றும் இதனடிப்படையில் அமைச்சுப் பொறுப்புகளும் அமைச்சர்களும் மாற்றி அமைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அரசின் பக்கம் தாவிய ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவுள்ளன.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவால் மேற்கொள்ளப்பட்ட 18வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்துக்கு ஆறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் எட்டு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஒரு தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினரும் மற்றும் பிரபா கணேசன் உள்ளிட்டோரும் ஆதரவளித்தனர்.

எனவே மகிந்த இந்த நேருக்கடியிலிருந்து தன்னை எவ்வாறு விடுவித்துக்கொள்ளப் போகிறார். இன்னும் எத்தனை புதிய அமைச்சுகளை உருவாக்க போகிறார். அல்லது யார் யாரை எல்லாம் ஏமாற்றப்போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.