இந்திய மக்களின் அன்பளிப்பு சீமெந்து பைகள் 1500 வவுனியாவில் பழுதடைந்து தேங்கி கிடக்கின்றது

இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்தின்போது மக்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கென இந்திய மக்களின் அன்பளிப்பாக வழங்கப்பட்ட சீமெந்த மூடைகளில் 1500 இற்கும் மேற்பட்ட மூடைகள் வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டிடத்தொகுதியில் அரச அதிகாரி ஒருவரினால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இவை மேற்படி கட்டிடத்தில் அடுக்கப்பட்டதாகவும் அவ்வேளையில் ஒரு சில சீமெந்து மூடைகளை மீள்குடியேறிய மக்களுக்கு வழங்கிய பின்னர் ஏனையவற்றை வழங்காது அங்கேயே பதுக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

மேற்படி மூடைகள் அடுக்கப்பட்டு நீண்ட காலமாக தமது கட்டிடத்தொகுதியில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தினர் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு அறிவிக்காமை தொடர்பிலும் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதுடன் கடந்த வாரம் பார ஊர்தி மூலம் சில சீமெந்து மூடைகள் வேறு இடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் கொட்டகைகளில் வாழ்ந்து வரும் நிலையில் அவற்றை அவர்களுக்கு வழங்காது வீண்விரயம் செய்தவர்கள் மீது இதுவரை எவரும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவரவில்லை எனவும் வவுனியா பொது அமைப்புக்களின் சார்பில் ஒருவர் தெரிவித்தார்.

பல லட்சம் பெறுமதியான சீமெந்து மூடைகள் பழுதடைந்தமைக்கு பிரதேச செயலாளரின் கடமை மீதான அசமந்த போக்கே காரணம் எனவும் தெரிவிக்கப்படுவதுடன் இது தொடர்பில் விசாரணை செய்வதற்கென தற்போது வவுனியா அரசாங்க அதிபரினால் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அதேவேளை இவ்விடயம் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிந்தும் இதுவரையில் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை என மீள் குடியேறிய மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.