வடக்கு, கிழக்கில் 25 புதிய தளங்களை அமைக்கிறது சிறிலங்கா கடற்படை

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் சிறிலங்கா கடற்படை புதிதாக 25 தளங்களை அமைக்கவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மீண்டும் தீவிரவாதம் தலையெடுப்பதைத் தடுப்பதற்கும், இந்துசமுத்திரம் வழியாக ஆயுதங்கள் சிறிலங்காவுக்கு கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கிலுமேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இந்தக் கடற்படைத் தளங்கள் அமைக்கப்பட்டு அவை அனைத்தும் ஒரே வலைப்பின்னலின் கீழ் இயங்கவுள்ளன. அத்துடன் இந்தக் கடற்பிராந்தியத்தில் பாதுகாப்பு கண்காணிப்பை வுலுப்படுத்தும் நோக்கில் சிறிலங்கா கடற்படை இஸ்ரேலிடம் இருந்து ஆறு புதிய ’சுப்பர்டோறா’ வகையைச் சேர்ந்த அதிவேகத் தாக்குதல் படகுகளை வாங்கியுள்ளது.இவற்றில், இரண்டு படகுகள் ஏற்கனவே கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை சிறிலங்கா கடற்படைத் தளபதி கிழக்கு கடலோரப் பகுதியில் புதிய முகாம்களை அமைப்பது தொடர்பாக ஆராய்வதற்காக நேற்றுமுன்தினம் இந்தப் பகுதிகளுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

கிழக்கு கடற்படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள திருகோணமலைக் கடற்படைத் தளம், கடல்சார் பயிற்சித்தளம், வலகம்பா, மகாவலி ஆகிய கடற்படைத் தளங்கள், புல்மோட்டைக் கடற்படை முகாம், முல்லைத்தீவிலுள்ள ரேடர் நிலையம் ஆகியவற்றுக்கு சிறிலங்கா கடற்படைத் தளபதி சென்றிருந்தார்.

அத்துடன் முல்லைத்தீவில் புதிய தளங்களை அமைப்பது தொடர்பாக முல்லைத்தீவு இராணுவத் தலைமையக தளபதியையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.