உயர்நிலைப் படைத் தளபதிகளுடன் கோத்தாபய ராஜபக்ச சீனாவுக்குப் பயணம்

ஒரு வாரலகாலப் பயணத்தை மேற்கொண்டு சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சீனாவுக்குச் சென்றுள்ளார்.

அவருடன் உயர்மட்ட படைத்தளபதிகளைக் கொண்ட குழுவொன்றும் சீனா சென்றுள்ளது.

இராணுவத் தலைமை அதிகாரி தயா ரத்நாயக்க, கடற்படைத் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் திசநாயக்க, விமானப்படைத் தலைமை அதிகாரி எயர் வைஸ் மார்சல் பிறேமச்சந்திரா உள்ளிட்ட உயரதிகாரிகள் இவருடன் சீனா சென்றுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காவுக்கு பிரதான ஆயுத வழங்குனராக சீனாவே இருந்து வந்தது.

ஆயுதக்கொள்வனவு மற்றும் இந்தியாவுடனான பாதுகாப்பு உறவுகள் பற்றி சீனாவுக்கு விளக்கமளிக்கவே கோத்தாபய ராஜபக்ச அங்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவுடன் சிறிலங்கா விரைவில் பாதுகாப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்துவுள்ளது. அது பாதுகாப்பு உடன்பாடு ஒன்றுக்கான அடித்தளமாக அமையும் என்று கருதப்படுகிறது.

இதுபற்றிக் கலந்துரையாடுவதற்காக இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் நிர்மல் வர்மா, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் வி. சிங் ஆகியோர் சிறிலங்கா வந்திருந்தனர்.

அதேவேளை இந்த விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்துவதற்காக இந்திய விமானப்படைத் தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலர் ஆகியோர் இந்த மாதம் சிறிலங்கா வரவுள்ளனர்.

இவர்களின் வருகையின் நோக்கம் குறித்து சீனாவுக்கு விளக்கமளிப்பதுடன் ஆயுத தளபாடக் கொள்வனவுகள் தொடர்பாக சீன நிறுவனங்களுடன் பேச்சு நடத்துவதற்கே கோத்தாபய ராஜபக்ச அங்கு சென்றிருக்கிறார்.

இவருடன் சென்றுள்ள முப்படைகளினதும் இரண்டாவது நிலைத்தளபதிகள் தமக்குத் தேவையான ஆயுத்தளபாடங்கள் தொடர்பாக சீன ஆயுத நிறுவனங்களுக்குச் சென்று பார்வையிடத் திட்டமிட்டுள்ளனர்.

அதேவேளை சீனாவே கடந்த வருடத்தில் சிறிலங்காவுக்கு அதிக நிதியுதவியை வழங்கிய நாடாக மாறியிருக்கிறது.

பாரம்பரியமாக இந்த முதலிடத்தை ஜப்பானே வகித்து வந்ததது. ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி விட்டு சீனா முதலிடத்தைப் பெற்றுள்ளது.

சிறிலங்காவுக்கு கடந்த வருடம் கிடைத்த வெளிநாட்டு நிதியுதவியில் சீனாவிடம் இருந்து கிடைத்தவை 54 வீதத்துக்கும் அதிகமாகும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.