போருக்குப் பின்னர் கிழக்கில் 95பேர் காணாமல் போயுள்ளனர்!

கிழக்கு மாகாணம் அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டு, மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் பெண்கள் உட்பட 95 பேர் காணாமல் போயிருப்பதாக மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.

காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் தங்களிடம் பதிவு செய்துள்ள விபரங்களின்படி, பாதுகாப்பு தரப்பு மற்றும் தமிழ் ஆயுதக்குழுக்கள் மீதே இது தொடர்பான சந்தேகங்களை அவர்கள் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கை சுமார் 95 ஆக இருந்தாலும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என தான் கருதுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் நேரடி பேச்சுக்களில் ஈடுபடவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த 55 வயதான கொக்குவில் கிராமத்தைச் சேர்ந்த வீரக்குட்டி மாரிதமுத்து, தனது மகனாகிய புஸ்பதேவா 20 மாதங்களுக்கு முன்னர் வீட்டுக்கு வந்த சிவிலுடையினரால் அழைத்துச் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 23 ஆம் திகதி மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினராகிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த பிரகாசம் சகாயமணி என்பவரும் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி ஜோசப்பின் மேரி தெரிவித்துள்ளார்.

தனது கணவன் காணாமல் போவதற்கு முந்திய தினம் இரவு தொலைபேசி மூலம் அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேகதுரை சந்திரகாந்தன், சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பொதுவான பாதுகாப்புக்கு காவ்துறையினரும், பாதுகாப்புப் படையினருமே பொறுப்பு கூறவேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என்றும் சொல்லியிருக்கின்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.