சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு: சாட்சியமளிக்க அனைத்துலக மனித உரிமை அமைப்புகளுக்கு அழைப்பு

அடுத்துமாதம் நடைபெறவுள்ள அமர்வில் சாட்சியமளிப்பதற்கு அனைத்துலக மனித உரிமைக் குழுக்களுக்கு சிறிலங்காவின் படிப்பனைகளில் இருந்து பாடம் கற்பதற்கான நல்லிணக்க ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழு தற்போது சாட்சியங்களைப் பதிவு செய்து வருகிறது.

இந்த ஆணைக்குழு பிரசெல்சை தலைமையகமாகக் கொண்ட முரண்பாடுகளுக்கான அனைத்துலக குழு, நியுயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியவற்றுக்கு பொறுப்பு வாய்ந்த பிரதிநிதிகளை சாட்சியமளிக்க கொழும்புக்கு அனுப்புமாறு கேட்டுள்ளது.

ஒக்ரேபர் மாதம் நடைபெறவுள்ள அமர்வில் சாட்சியமளிப்பதற்கு பொருத்தமான திகதிகளைத் தெரிவு செய்யுமாறும் கடந்த ஓகஸ்ட் 31ம் திகதி கடிதம் அனுப்பியுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை, அழைப்பு அனுப்பப்பட்ட மூன்று உதவி நிறுவனங்கள் இன்னமும் தமது அதிகாரபூர்வ பதிலை அனுப்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அனைத்துலக மன்னிப்புச்சபை தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை கொழும்பு வார இதழ் ஒன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.

தமக்கு அழைப்புக் கிடைத்ததாகவும் அதுபற்றி விவாதித்து வருவதாகவும் அனைத்துலக மன்னிப்புச்சபையின் தெற்காசியாவுக்கான ஊடக அதிகாரி சொன்யா மெர்க்கோவா தெரிவித்தார்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் முரண்பாடுகளுக்கான அனைத்துலக குழுவும், மனித உரிமைகள் கண்காணிப்பகமும்- போர்க்குற்றங்கள் புரிந்ததாக சிறிலங்கா படையினர் மற்றும் விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்டியிருந்தன.

அத்துடன் அனைத்துலக மன்னிப்புசபை கடந்த மாதம் அனைத்துலக மனிதாபிமான தினத்தன்று வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், சிறிலங்காவில் மனிதாபிமானச் சட்டங்களை மீறும் வகையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்குழு ஒன்றை ஐ.நா நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.

இதன் அடிப்படையிலேயே அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புகளுக்கும் சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு சாட்சியமளிக்க அழைப்பு விடுத்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.