பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி சொர்ணலதா இன்று காலை மாரடைப்பால் மரணம்

பிரபல சினிமா பின்னணி பாடகி சொர்ணலதா இன்று காலை திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 37.  திரைப்பட பின்னணி பாடகி சொர்ணலதா, நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்றுவந்தார்.

அவரது உடல் நிலை இன்று காலை மோசமானது. இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் மரணம் அடைந்தார். அவரது திடீர் மரணம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடுதான் சொர்ணலதாவின் சொந்த ஊர். 1989ம் ஆண்டில் திரைப்படங்களில் பாட ஆரம்பித்தார். இவரது தந்தை கே.சி.செருகுட்டி சிறந்த ஆர்மோனிய கலைஞரும், பாடகரும் ஆவார். தாய் கல்யாணி இசையில் ஆர்வம் கொண்டவர். சொர்ணலதாவும் ஆர்மோனியம், கீ&போர்டு வாசிப்பார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

‘நீதிக்கு தண்டனை’ படத்தில்தான் அவர் முதன்முறையாக பாடினார். ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ என்ற அந்த முதல் பாட்டிலேயே பிரபலமானார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய ‘போறாளே பொன்னுத்தாயி…’ பாடலுக்காக தேசிய விருது பெற்றார். ‘போவோமா ஊர்கோலம்’ (சின்னத்தம்பி), ‘மாலையில் யாரோ மனதோடு பேச’ (சத்ரியன்), ‘ஆட்டமா தேரோட்டமா’ (கேப்டன் பிரபாகரன்), ‘ராக்கம்மா கையதட்டு’ (தளபதி) உள்ளிட்ட பல பாடல்கள் இவருக்கு ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துத் தந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட பல மொழிகளில் 7 ஆயிரம் பாடல்கள் பாடி இருக்கிறார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.