கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டின் கீழ் கொழும்பு மாநகரம்!

சிறிலங்காவின் படைத்துறை அமைச்சின் கீழ் கொழும்பு நகரத்துக்கான அபிவிருத்தி அதிகார சபை ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

கொழும்பு நகர அபிவிருத்தி அதிகார சபையை உருவாக்கி அதை படைத்துறை அமைச்சின் கீழ் கொண்டு வருவதன் ஊடாக கோத்தபாய ராஜபக்சவின் நேரடி நிர்வாகத்துக்குள் கொழும்பு நகரைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய சிறிலங்காவின் படைத்துறை அமைச்சின் கீழ் கொழும்பு நகரத்துக்கான அபிவிருத்தி அதிகார சபை ஒன்று உருவாக்குவது தொடர்பான சட்டவழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.

இதன் பிரகாரம் கொழும்பு நகரின் எல்லாவித அபிவருத்தி நடவடிக்கைகளையும் கையாள்வதற்கு ஏற்ற வகையில் இறுக்கமான வழிகாட்டலுடன் கூடிய மக்களால் தெரிவு செய்யப்படாத நிர்வாகம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

சிறிலங்காவின் படைத்துறை அமைச்சின் கீழேயே தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபை இயங்கி வருவதால், கொழும்பு நகர அபிவிருத்தி அதிகார சபையும் படைத்துறை அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழேயே இயங்குவதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அபிவிருத்தியை நோக்கத்தைக் கொண்டே இக் கொழும்பு நகர அபிவிருத்தி அதிகார சபை அமைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை, சிறிலங்காத்தின் இந் நடவடிக்கை மூலம் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கொழும்பு மாநகர சபை இல்லாமல் போவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

1865ஆம் ஆண்டு பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் கொழும்பு மாநகர சபை உருவாக்கப்பட்டு, 1966ஆம் ஆண்டு அதன் முதலாவது கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.