எதிர்க்கட்சித் தலைவராக சஜீத் பிரேமதாசா? – இறுதி முடிவை சபாநாயகரே தீர்மானிப்பார்!

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசாவை தெரிவு செய்யப் போவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மீது அதிருப்தியடைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கவது குறித்து முடிவு செய்துள்ளனர்.

இந் நிலையில், அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசாவை எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்வது தொடர்பில் அவருடன் முக்கியஸ்தர்கள் விரைவில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் 25 உறுப்பினர்களுடன் இரண்டாவது சக்தியாகத் தாம் திகழப் போவதாகவும், அதிக உறுப்பினர்களைக் கொண்டவர்கள் என்ற ரீதியில் தமது தரப்பிலிருந்தே எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், சபாநாயகரிடம் இதற்கான அங்கீகாரத்தைச் பெற்றுக் கொள்வதற்காக அனைவரது கையொப்பங்களையும் கொண்ட கடிதம் ஒன்றைத் தயாரிக்கும் வேலைகளை இவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, சிறிலங்காவின் 18வது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம்  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து ஆளும் தரப்புடன் இணைந்து கொண்ட ஆறு பேரையும் தமது அணியில் இணைத்துக் கொள்வது குறித்தும் இவர்கள் கவனம் செலுத்தி வருவதாக அவ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு பின்னர் அவர்களில் பெரும்பகுதியினர் சுயமாக இயங்கும் போது தமது தரப்பிலிருந்தே ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில், இறுதித் தீர்மானம் எடுப்பவராக சபாநாயகரே விளங்குவார் என சட்ட வல்லுநனர்கள் கூறுகின்றனர். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியிள் பிளவு ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சிகளை அக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான காமினி ஜயவிக்கிரம பெரேரா மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு கரு ஜெயசூரியா அல்லது சஜீத் பிரேமதாசா நியமிக்கப்படுவதையே அக் கட்சியின் பலரது கருத்தாகவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்று ஏற்பட்டுள்ள பிளவு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு ஒரு தர்மசங்கடமான நிலையைத் தோற்றுவித்துள்ளதாக ஆளும் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் இன்றைய பலவீனமான தலைமைத்துவம் தொடரும் வரை தேர்தல்கள் உட்பட அனைத்து விடயங்களிலும் தமது தரப்பு இலகுவாக வெற்றி பெற முடியுமென்ற நிலை இருக்கின்றது.

இந் நிலையில், எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டு மக்கள் ஆதரவுமிக்க ஒருவர் தலைவராகத் தெரிவானால் அது அரசாங்கத்துக்கு ஒரு சவாலாக அமையலாமென ஆளும் தரப்பு கருதுவதாக தெரிய வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டும் படி இந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கையெழுத்துடன் விடுத்த கோரிக்கையை அக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்ததை அடுத்தே இந் நிலை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.