கனேடிய தமிழ் காங்கிரஸ் தலைமைக் காரியாலயம் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

கனேடிய தமிழ் காங்கிரஸ் தலைமைக் காரியாலயம் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கனடாவின் ரொரன்டோவில் அமைந்துள்ள கனேடிய தமிழ் காங்கிரஸின் தலைமைக் காரியாலயம் உடைக்கப்பட்டு, முக்கிய தகவல்கள் அடங்கிய கணனிகள் களவாடப்பட்டுள்ளன.

அண்மையில் கனடாவிற்குள் பிரவேசித்த புகலிடக் கோரிக்கையாளர்களின் பெயர் விபரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இந்த கணனியில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
தலைமைக் காரியாலத்திற்குள் பிரவேசித்த நபர்கள் ஆவணங்களை சேதப்படுத்தியுள்ளதாக காங்கிரஸின் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
 
களவாடப்பட்டுள்ள கணனியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் பற்றிய தகவல்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
சன் சீ கப்பல் விவகாரத்தில் தொடர்பு பட்ட காரணத்தினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த சம்பவத்தின் பின்னணியில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு தொடர்பிருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமது அமைப்பை விரும்பாத சிலர் இதனை மேற்கொண்டிருப்பதற்கான சாத்தியங்களும் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டாமென தமக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்துள்ளார்.
 
களவாடப்பட்ட கணனித் தகவல்களைக் கொண்டு புகலிடக் கோரிக்கையாளர்களின் இலங்கை சொந்தங்களின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்தச் சம்பவம் குறித்து கனேடிய காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.