அரச ஆதரவு தொலைக்காட்சி சேவையில் செய்திப் பணிப்பாளராக தயா மாஸ்ரர்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகத்துறைப் பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்ரர் தற்போது அரச ஆதரவுத் தொலைக்காட்சி ஒன்றின் செய்திச் சேவைப் பணிப்பாளராக யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் கடமையாற்றி வருகின்றார் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு மிகவும் நெருக்கமான தொலைக்காட்சிச் சேவை என்று நம்பப்படும் டான் ரி.வியின் செய்திச் சேவைப் பணிப்பாளராகவே இவர் செயற்பட்டு வருகின்றார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முன்பு வெளியான ஈழநாடு பத்திரிகையின் ஊடகவியலாளராக இருந்த ஒருவர் பிரான்ஸில் இருந்து இத்தொலைக்காட்சிச் சேவையை நடத்துகின்றார்.

தயா மாஸ்ரர், புலிகளின் மொழிபெயர்ப்பாளராக செயற்பட்ட ஜோர்ஜ் மாஸ்ரர் ஆகியோர் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அரச படையினரிடம் சரண் அடைந்திருந்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காட்டியவர்களில் தயா மாஸ்ரரும் ஒருவர். பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதய நோயாளியான தயா மாஸ்ரர் முன்பு கொழும்பில் அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார். தற்போது பருத்தித்துறை அரச வைத்தியசாலையில் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இவர் ஐந்து மில்லியன் ரூபாய் செலவில் பருத்தித்துறையில் வீடு ஒன்றைக் கட்டி வருகின்றார் என்று சண்டே லீடர் பத்திரிகை செய்தி பிரசுரித்துள்ளது. இவர் புலிகள் இயக்கத்தில் இணைகின்றமைக்கு முன் அரச பாடசாலை ஒன்றில் ஆங்கில பாட ஆசிரியராக கடமையாற்றி இருந்தார்.

ஆயினும் இவரின் மனைவி பருத்தித்துறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் தற்போதும் ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.